
பதிவு: வியாழக்கிழமை, குரோதி வருடம், மாசி 22, மார்ச் 06, 2025, 05:`30 AM
செஞ்சி,
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மாசி பெருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தளமாக உள்ள அங்காளம்மன் கோயிலில் ஆண்டு தோறும் மாசி பெருவிழா நடைபெற்று வருவது வழக்கம். இந்நிலையில் மாசி பெருவிழா கடந்த 26 ம்தேதி மகா சிவராத்திரி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் மயானக்கொள்ளை, தீ மிதி, திருத்தேர் வடம் பிடித்தல் ஆகியவை முக்கிய திருவிழாவாகும்.
இந்நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
7 ம் நாள் திருவிழாவான திருத்தேர் வடம் பிடித்தல் நேற்றுமாலை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலையில் மூலவர் அங்காளம்மனுக்கு பால், தயிர், தேன், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்று, பல்வேறு மலர்களை கொண்டு அலங்காரம் செய்விக்கப்பட்டு, தங்க கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து உற்சவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பல்வேறு மலர்களை கொண்டு அலங்காரம் செய்விக்கப்பெற்று, சரியாக பகல் 3 மணிக்கு அம்மன் அலங்கரிக்கப்பட்ட புதிய திருத்தேரில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் அம்மனுக்கு மகா தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து தேர் சக்கரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து தொடர்ந்து 4.30மணிக்கு தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஆரணி எம்.பி. தரணிவேந்தன், சட்டமன்ற உறுப்பினர்கள் செஞ்சி மஸ்தான், அன்னியூர் சிவா, சிவக்குமார், கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான், அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் பழனி உள்ளிட்ட அதிகாரிகள் அறங்காவலர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பக்தர்கள் அங்காளம்மா என பக்தி கரகோஷத்துடன் தேரினை வடம் பிடித்து இழுத்து வேண்டுதலை நிறைவேற்றினர். பக்தர்கள் தங்கள் விளைநிலங்களில் விளைந்த காய்கறிகள் தானிய வகைகள் நாணயங்கள் ஆகியவற்றை தேரின் மீது வீசி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

இதில் திண்டிவனம் சார் ஆட்சியர் திவ்யான்ஷு நிகம், ஒன்றிய பெருந்தலைவர்கள் மேல்மலையனூர் கண்மணி நெடுஞ்செழியன், செஞ்சி விஜயகுமார், மற்றும் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், சென்னை, சேலம், தர்மபுரி மற்றும் கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்காண பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் விழுப்புரம் டிஐஜி திஷா மித்தல், விழுப்பும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டபோலீசார் பாதுகாப்புபணியில் ஈடுபட்டிருந்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் மேல்மலையனூர் ஜீவானந்தம், கோவில் அறங்காவல் குழு தலைவர் மதியழகன், அறங்காவலர்கள் சுரேஷ், ஏழுமலை, பச்சையப்பன், சரவணன், வடிவேல், சந்தானம் மற்றும் மேலாளர் மணி உள்ளிட்ட கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் மேல்மலையனூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.