கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் 4 ஆண்டுகளாக ஏமாற்றி விட்டார் முதல்வர் – அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம்

Spread the love

பதிவு: புதன்கிழமை, பிப்ரவரி 26, 2025, 03:`05 AM

சென்னை,

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் 4 ஆண்டுகளாக ஏமாற்றி விட்டார் முதல்வர் – அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம்: வகுப்பறைகளுக்கு பூட்டு – எங்களை ஏமாற்றினால் 2026 தேர்தலில் ஏமாறுவீர்கள் என எச்சரிக்கை

பழைய ஓய்வூதிய திட்டம் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அரசு ஊழியர்கள் இன்று போராட்டம் நடத்தினர்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும், சரண்விடுப்பு, காலமுறை ஊதியம், பல்வேறு துறைகளில் 30 சதவீதத்துக்கு மேல் காலியாக உள்ள இடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ வலியுறுத்தி வருகிறது.

இது தொடர்பாக திருச்சியில் கடந்த 4 ஆம் தேதி மாநில அளவிலான கூட்டம் நடைபெற்ற நிலையில், அதில், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என அறிவித்திருந்தது.

அதன் படி, கடந்த 14 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் வட்ட அளவில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அதன் தொடர்ச்சியாக வேலை நிறுத்தமும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் சாலை மறியல் போராட்டமும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகள் குறித்து சங்க நிர்வாகிகளுடன் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ், கயல்விழி ஆகிய அமைச்சர்கள் அடங்கிய குழு பேச்சுவார்த்தை நடத்தும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதன்படி, சென்னை தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் குழு நேற்று ஆலோசனை நடத்தியது. அப்போது, தங்கள் கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வழங்கினர். இதைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து அமைச்சர்கள் குழு நேரில் எடுத்துரைத்தனர். முதலமைச்சர் உடனான 45 நிமிட ஆலோசனையை தொடர்ந்து, ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளிடம் மீண்டும் 4 வார அவகாசம் வேண்டும் என்று கூறப்பட்டது.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள், அரசு தரப்பில் அவகாசம் கேட்டதால் ஏற்கனவே அறிவித்த சாலை மறியலுக்கு பதிலாக தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக கூறினர். இந்த போராட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள சுமார் 11 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து இன்று தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுமுறை எடுத்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னை எழிலகத்தில்…

சென்னை காமராஜர் சாலையில் உள்ள எழிலகம் நுழைவு வாயிலில் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் மாயவன், காந்திராஜன், வெங்கடேசன், சுரேஷ் ஆகியோர் தலைமையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட 10 அம்சகோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

அப்போது ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு ஊழியர்கள், ஆசியர்களின் 10 அம்சகோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த 4 அமைச்சர்கள் குழுவை நியமித்தார். அந்த அமைச்சர்களுடன் நேற்று தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பு நிர்வாகிகள் 31 பேரும் பேச்சுவார்த்தை நடத்தினோம். இந்த அரசு கொடுத்த வாக்குறுதிகள் குறித்து விளக்கி கூறினோம். அதன்பின்னர் முதலமைச்சருடன் கலந்து பேசி முடிவு அறிவிப்பதாக அமைச்சர்கள் குழுவினர் தெரிவித்தனர். ஆனால் முதலமைச்சர் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற மீண்டும் கால அவகாசம் வேண்டும் என்று கூறியுள்ளார்.

வாக்குறுதியை நிறைவேற்றாத ஒரே முதலமைச்சர்

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசியர்களை வஞ்சிக்கும் செயலை கண்டித்து இன்று ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதுவரை நாங்கள் பார்த்த முதலமைச்சரிலேயே சொன்னதை, கொடுத்த வாக்குறுதியை 4 ஆண்டுகள் நிறைவேற்றாத முதலமைச்சர் இந்தியாவிலேயே இருக்கிறார் என்றால் அது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டுமே. சொன்ன வாக்குதியை அவர் நிறைவேற்றவில்லை. நேற்று தலைமை செயலகம் வந்த முதலமைச்சர், அங்கிருந்த எங்களை அழைத்து பேசியிருக்கலாம். ஆனால் பேசவில்லை. எங்களை சந்தித்து பேச முதலமைச்சருக்கு மனமில்லை. எங்களை உதாசினப்படுத்தியிருக்கிறார்.

இன்று தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கொத்தளிப்பில் இருக்கிறார்கள். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் ஏமாற்றினால் கண்டிப்பாக 2026 சட்டமன்ற தேர்தலில் நீங்கள் ஏமாறுவீர்கள். இதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். கால அவகாசம் கேட்பது எங்களை ஏமாற்றுதவற்காக. எங்கள் போராட்டத்தை ஒத்திவைப்பதற்காக. 4 ஆண்டுகள் அவகாசம் கொடுத்துவிட்டோம். மீண்டும் 4 வார அவகாசம் கேட்பது எங்கள் போராட்டத்தை மழுங்க செய்வதற்காக தவறான போக்காகும். தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். அதை வழங்க மறுப்பதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

நாங்கள் எங்களது கோரிக்கைகளை வெல்வதற்கு என்ன என்ன வழிமுறைகள் இருக்குமோ அத்தனையையும் செய்து முடிப்போம். 2020ம் ஆண்டு நிலைமை உங்களுக்கு ஏற்படக்கூடாது என்று நாங்கள் கவலைப்படுகிறோம். அது உங்கள் கையில் தான் உள்ளது. எங்களது கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நடைமுறைப்படுத்துங்கள். இல்லையென்றால் எங்கள் ஆவேசம் போராட்டமாக வெடிக்கும். அடுத்தகட்டமாக முழுமையான வேலை நிறுத்தம் போராட்டம் நடைபெறும். ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் மீண்டும் கூடி பேசி முடிவு செய்வோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

வகுப்பறைக்கு பூட்டு

இதே போல் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மறியல் போராட்டம் நடைபெற்றது. ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜாக்டோ ஜியோ போராட்டம் காரணமாக புதுக்கோட்டை இலுப்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவில்லை.புதுக்கோட்டை மாவட்டத்தில் மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகள் மட்டுமே முழு அளவில் இயங்குவதாக கூறப்பட்டது. ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக இலுப்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் சில வகுப்பறைகளுக்கு பூட்டு போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *