தொகுதி மறுசீரமைப்பு பற்றி விவாதிக்க மார்ச் 5–ந் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

Spread the love

பதிவு: புதன்கிழமை, பிப்ரவரி 26, 2025, 03:`00 AM

சென்னை,

8 நாடாளுமன்ற தொகுதிகளை குறைக்கும் அபாயம் – 40 கட்சிகளுக்கு அழைப்பு – நாடாளுமன்றத்தில் தமிழக குரலை ஒடுக்க மத்திய அரசு சதி – மற்றொரு மொழிப்போருக்கு தயார்

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதியை பிரித்தால், தமிழகத்தில் இருக்க கூடிய தொகுதிகளில் 8 தொகுதியை இழக்க கூடிய சூழல் ஏற்பட்டு இருக்கிறது. எனவே தொகுதி மறுசீரமைப்பு பற்றி விவாதிக்க 5ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

இந்த கூட்டத்தில் நீட் விலக்கு, மும்மொழி கொள்கை உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்படும் என்றும் முதல்வர் கூறினார்.

இன்னொரு மொழிப்போருக்கு தயாராக இருக்கிறோம் என்றும் அவர் கூறினார்.

தமிழக சட்டசபையில் அடுத்த மாதம் (மார்ச்) 14ந் தேதி 2025- 2026-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், 15-ந் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட இருக்கின்றன.

பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் என்ன? துறைகள் வாரியாக நிதி ஒதுக்கீடு எவ்வளவு? என்பது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக 19வது அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பட்ஜெட் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

இதன் பின்னர் முதலமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

தமிழகம் மிகப்பெரிய உரிமை மீட்பு போராட்டம் நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. ஆகவே வரும் மார்ச் 5ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும். இதற்காக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 40 கட்சிகளை அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று அந்த கட்சிகளுக்கு கடிதம் அனுப்ப உள்ளோம்.

கூட்டத்தில் தொகுதி மறு சீரமைப்பு குறித்து விவாதிக்கப்படும். தொகுதி மறு சீரமைப்பு என்ற பெயரில், தென் இந்தியாவின் மேல் ஒரு கத்தி தொங்கி கொண்டு இருக்கிறது. எல்லாவற்றிலும் முன்னணியில் உள்ள தமிழகம் இப்போது கடுமையாக பாதிக்கப்பட உள்ளது.

8 தொகுதிகள் குறையும்

தமிழகத்தில் இப்போது 39 நாடாளுமன்ற தொகுதிகள் இருக்கிறது. இது 31 தொகுதியாக குறையும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது. மத்திய அரசு 2026ம் ஆண்டு நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை மறுசீரமைப்பு செய்ய போகிறது.

பெண்கள் கல்வி, குடும்ப கட்டுப்பாடு ஆகியவற்றில் தமிழகம் சாதித்துள்ளது. மக்கள் தொகையை கட்டுப்படுத்தி சிறப்பாக செயல்பட்ட தமிழகத்தில் எம்.பி.க்கள் எண்ணிக்கையை குறைப்பதா? மக்கள் தொகை குறைவாக இருக்கும் காரணத்தினால், நாடாளுமன்ற தொகுதிகள் எண்ணிக்கையை குறைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு இருக்கிறது.

தற்போதைய மக்கள் தொகையின் அடிப்படையில், நாடாளுமன்ற தொகுதிகளின் மறுசீரமைப்பை 2 விதமான முறைகள் மூலம் மேற்கொள்ள கருதப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல் முறையின் கீழ், ஏற்கெனவே உள்ள தொகுதிகளின் எண்ணிக்கையின்படி, தற்போதைய மக்கள் தொகையின் அடிப்படையில் மறுசீரமைப்பு செய்தால், தமிழகம் 8 நாடாளுமன்ற தொகுதிகளை இழக்க வேண்டியிருக்கும்.

2வது முறையின்படி, மொத்த நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை 848 ஆக உயர்த்தி, தற்போதைய மக்கள் தொகையின் அடிப்படையில் மறுசீரமைப்பு செய்தால், நமக்குக் கூடுதலாக கிடைக்க வேண்டிய 22 தொகுதிகளுக்குப் பதிலாக, 10 தொகுதிகள் மட்டுமே கிடைத்து, 12 தொகுதிகளை நாம் இழக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே, எவ்வகையில் பார்த்தாலும், தமிழகத்திற்கு பேரிழப்பு ஏற்படும் வாய்ப்பே நம் முன் நிற்கிறது. அதாவது தமிழகத்திற்கு 39 எம்.பி.க்கள் இருக்க மாட்டார்கள். 31 எம்.பி.க்கள் தான் இருப்பார்கள். நாட்டில் ஒட்டுமொத்த எம்.பி.க்கள் எண்ணிக்கை அடிப்படையில் பிரிந்தாலும் நமது பிரதிநிதித்துவம் குறையும்.

தமிழக குரலை ஒடுக்க மத்திய அரசு சதி

நீட் விலக்கு, மும்மொழிக் கொள்கை பிரச்சினையில் குரல் எழுப்ப நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களின் எண்ணிக்கை அவசியமான ஒன்று. நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் குரலை ஒடுக்க மத்திய அரசு சதி வேலை செய்கிறது.

இதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் அரசியலை கடந்து இணைந்து குரல் கொடுக்க வேண்டும்.

மொழிப்போருக்கு தயார்

அனைத்து கட்சி கூட்டத்தில் நீட் தேர்வு, மும்மொழி கொள்கை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும். அனைத்து கட்சி தலைவர்களும் குரல் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

இன்னுமொரு மொழிப்போருக்கு மத்திய அரசு வித்திடுகிறதா? என நிருபர் எழுப்பிய கேள்விக்கு, ‘ நிச்சயமாக வித்திடுகிறது; அதற்கு நாங்களும் தயாராக இருக்கிறோம்’ என முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *