
பதிவு: செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 25, 2025, 05:`50 AM
சென்னை,
ஜெயலலிதா பிறந்தநாள் – தமிழகம் முழுவதும் கோலாகல கொண்டாட்டம் – சென்னையில் ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி மாலை – 77 கிலோ கேக் வெட்டினார் – ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி
ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி ராயப்பேட்டையில் உள்ள அண்ணா தி.மு.க. தலைமை கழகம் விழா கோலம் பூண்டிருந்தது. வாழை மரம், மலர்களால் பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. எம்.ஜி.ஆர். ஜெயலலிதா சிலைகளும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
எழுச்சி வரவேற்பு
அண்ணா தி.மு.க. தலைமை கழகத்துக்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் எழுச்சிமிகு வரவேற்பு கொடுத்தார்கள். மலர் தூவியும், பூரண கும்ப மரியாதை அளித்தும் வாழ்த்து கோஷம் எழுப்பியும் எடப்பாடியை வரவேற்றார்கள். ஏராளமானவர்கள் பூங்கொத்து, சால்வை கொடுத்து வரவேற்றார்கள்.
தலைமை கழக வளாகத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு பெரிய ரோஜாப்பூ மாலை அணிவித்து வணங்கி, மலர் தூவினார். இதனை அடுத்து எம்.ஜி.ஆர். சிலைக்கும் ரோஜாப்பூ மாலை அணிவித்து மலர் தூவி வணங்கினார்.
இதன் பின்னர் அண்ணா தி.மு.க. கொடி ஏற்றி வைத்து, நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் இனிப்பு வழங்கினார். பின்னர் பிறந்தநாள் மலரை எடப்பாடி பழனிசாமி வெளியிட, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பெற்றுக்கொண்டார்.
மருத்துவ முகாம்
அதனையடுத்து, அம்மாவின் பிறந்த நாளையொட்டி, கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டாக்டர் சி. விஜயபாஸ்கரால், தலைமைக் கழக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மருத்துவ முகாமையும் எடப்பாடி துவக்கி வைத்தார்.
இந்த முகாமில், பொது மருத்துவம், இ.சி.ஜி, ரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவு கண்டறிதல் மற்றும் கண் பரிசோதனை, உள்ளிட்ட பரிசோதனைகளை செய்து ஆலோசனைகள் வழங்கப்பட்டு, உரிய மருந்து, மாத்திரைகள் கொடுக்கப்பட்டும்; இலவச கண் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டும் வருகின்றன. இந்நிகழ்வின்போது, கழக மருத்துவ அணி இணைச் செயலாளர் எம்.ராமசாமி மற்றும் டாக்டர் டி.அருண்குமார் உள்ளிட்ட மருத்துவர்களும் உடன் இருந்தனர்.
77 கிலோ கேக் வெட்டினார்
ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, ஜெயலலிதா பேரவைச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார் ஏற்பாட்டின்பேரில், பேரவை சார்பில் தயார் செய்யப்பட்டிருந்த 77 கிலோ எடை கொண்ட கேக்கினை வெட்டி, கழக நிர்வாகிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் தொண்டர்களுக்கு வழங்கினார்.
பின்னர், ஏழை, எளியோர் பயன்பெறும் வகையில், 5 பேருக்கு தையல் மெஷின், 2 பேருக்கு கிரைண்டர், 5 பேருக்கு இட்லி பாத்திரம், 5 பேருக்கு இஸ்திரிப் பெட்டி வழங்கினார். தொடர்ந்து 50 பேருக்கு வேஷ்டியும், 50 மகளிருக்கு சேலையும் வழங்கினார்.
தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டாக்டர் சி. விஜயபாஸ்கர் ஏற்பாடு செய்திருந்த மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். இந்த முகாமில், பொது மருத்துவம், இ.சி.ஜி., பி.பீ. சர்க்கரையின் அளவு கண்டறிதல் மற்றும் கண் பரிசோதனை, உள்ளிட்ட பரிசோதனைகளை செய்து ஆலோசனைகள் வழங்கப்பட்டு, உரிய மருந்து, மாத்திரைகள் கொடுக்கப்பட்டும்; இலவச கண் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டும் வருகின்றன.
மகளிர் ஆரோக்கிய பெட்டகம்
மருத்துவ முகாமிற்கு வருகை தந்த மகளிர் அனைவருக்கும், மகளிர் ஆரோக்கியத்திற்கான 11 பொருட்கள் அடங்கிய மருத்துவப் பெட்டகத்தை எடப்பாடி வழங்கினார்.
இந்நிகழ்வுகளின்போது, கழக மருத்துவ அணி இணைச் செயலாளர் எம்.ராமசாமி மற்றும் டாக்டர் டி. அருண்குமார் உள்ளிட்ட மருத்துவர்களும் உடன் இருந்தனர்.
விளையாட்டு வீரர்கள் அணி
தலைமைக் கழக மெயின் ஹாலில், அண்ணா தி.மு.க.வின் ஓர் அங்கமாக, புதிதாக துவக்கப்பட்ட ‘கழக இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணி’’-யின் இலட்சினையை (லோகோ) வெளியிட்டார். அப்போது, கழகத்தில் விளையாட்டு வீரர்கள் அணி உருவாக்கப்பட்டுள்ளது குறித்து எடுத்துரைத்ததோடு, இந்த அணியில் விளையாட்டு வீரர்கள் அதிக அளவில் சேர்ந்து பயன்பெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்கு சிறப்பு சேர்த்திடும் வகையில், ஜெயலலிதா தமது ஆட்சிக் காலங்களில் பெண்கள் நலன் கருதி செயல்படுத்திய பல்வேறு முத்தான திட்டங்களை எடுத்துரைத்து, அவரது புகழையும், சாதனைகளையும் நெஞ்சம் உருக நினைவுகூர்ந்தார்.
கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பேராசிரியர் சா.கலைப்புனிதன் தயார் செய்திருந்த ‘மக்கள் தெய்வம் புரட்சித் தலைவி அம்மா’’, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் தமிழ்ப்பற்று’’ ஆகிய நூல்களை வெளியிட்டார்.
மக்கள் மனங்களில் நீங்கா இடம்பெற்றுள்ள, ஜெயலலிதாவைப் போல் ஆடை அலங்காரத்துடன் வீற்றிருந்த 50 பெண் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி, அவர்களுக்கு தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்து, குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
அன்னதானம்
மகளிர் அணிச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா. வளர்மதி ஏற்பாட்டின்பேரில், கழக மகளிர் அணி சார்பில், ஏழை, எளியோர் பசியாறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, அன்னதான நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.
தலைமைக் கழக வளாக எதிர்புறத்தில், தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம், திருவல்லிக்கேணி மேற்கு பகுதி, 119 கிழக்கு வட்டக் கழகத்தின் சார்பில், ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதானம் மற்றும் நலத் திட்ட உதவிகளையும் எடப்பாடி வழங்கினார்.
அண்ணா தி.மு.க. தலைமை கழகத்தை அடுத்துள்ள ஹேமமாலினி திருமண மண்டபத்தில், கழகத்திற்குப் புதுரத்தம் பாய்ச்சிட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு, கழகத்தின் ஓர் அங்கமாக கழக இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணி’’-யை உருவாக்கி சிறப்பு சேர்த்திட்ட எடப்பாடி பழனிசாமியை, 2000 விளையாட்டு வீரர்கள் வரவேற்று, தங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.
தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி, பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்கி தமது இதயமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார். மேலும், கழக விளையாட்டு வீரர்களிடையே, விளையாட்டின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, இந்த அணியில் விளையாட்டு வீரர்கள் அதிக அளவில் சேரவேண்டும் என்றும் விளையாட்டு வீரர்களுக்கு கழகம் என்றென்றும் துணை நிற்கும் என்றும் கூறினார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் வி.வி.ஆர். ராஜ்சத்யன் சிறப்பான முறையில் செய்திருந்தார். ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, தலைமைக் கழக வளாகம் அமைந்துள்ள சாலையின் இரு மருங்கிலும் கழகக் கொடித் தோரணங்கள், வரவேற்புப் பதாகைகள் அழகுற அமைக்கப்பட்டு நாதஸ்வரம், பேண்டு வாத்தியம், செண்டை மேளம் முழங்க, கலை நிகழ்ச்சிகள் நடைபெற, கழகக் கொடிகளையும், அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தொழிற்சங்கக் கொடிகளையும் தங்கள் கைகளில் எந்திய வண்ணம் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, தலைமைக் கழக வளாகம் மற்றும் சாலைகள் முழுவதும் விழாக் கோலம் பூண்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் தமிழ்மகன் உசேன், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன், எஸ்.பி.வேலுமணி, பா.வளர்மதி, எஸ்.கோகுலஇந்திரா, பொன்னையன், செல்லூர் ராஜூ, என்.தளவாய்சுந்தரம், வைகை செல்வன், டாக்டர் விஜயபாஸ்கர், ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன், ஓ.எஸ்.மணியன், உடுமலை ராதாகிருஷ்ணன், டாக்டர் மைத்ரேயன், காமராஜ், ஆர். கமலக்கண்ணன், என்.ஆர்.சிவபதி, கடம்பூர் ராஜூ, ஒய்.ஜவாஹிருல்லா, கே.ஏ.கே.முகில், முன்னாள் எம்.எல்.ஏ. கே.குப்பன், எஸ்.ஆர்.விஜயகுமார், பா.பென்ஜமின், மாவட்ட செயலாளர்கள் நா.பாலகங்கா, விருகை வி.என்.ரவி, தி.நகர் சத்தியா, ஆதிராஜாராம், ஆர்.எஸ். ராஜேஷ், டி.ஜி.வெங்கடேஷ் பாபு, எம்.கே.அசோக், கே.பி.கந்தன், ஜெயலலிதா பேரவை துணை செயலாளரும், பரங்கிமலை ஒன்றிய செயலாளருமான பெரும்பாக்கம் எ.ராஜசேகர், அமைப்பு செயலாளர் ராயபுரம் ஆர்.மனோ, இலக்கிய அணி இணை செயலாளர் டி.சிவராஜ், மாணவர் அணி துணை செயலாளர் ஆ.பழனி, இ.எஸ்.சதீஷ்பாபு, ஆயிரம் விளக்கு பகுதி துணை செயலாளர் வழக்கறிஞர் ஆர்.சதாசிவம், பகுதி செயலாளர் வி.எம்.ஜி. கோபால், வட்ட செயலாளர் கே.துளசி, வி.எஸ். வேல் ஆதித்தன், டி.சி.கோவிந்தசாமி, வாலாஜாபாத் கணேசன், சோமசுந்தரம், பேரவை துணை செயலாளர் பி.சந்தான கிருஷ்ணன், டாக்டர் சுனில், வட்ட செயலாளர் பி.சின்னையன் உட்பட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.