மும்மொழி கொள்கையை ஏற்க நிர்ப்பந்தம் – திமிராக பேசுவதா? மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

Spread the love

பதிவு: ஞாயிறுக்கிழமை, பிப்ரவரி 16, 2025, 04:40 PM

சென்னை,

மும்மொழி கொள்கையை ஏற்க நிர்ப்பந்தம் – தமிழர்களின் தனிக்குணத்தை டெல்லி பார்க்க வேண்டியிருக்கும் – திமிராக பேசுவதா? மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் எச்சரிக்கை – பிளாக்மெயில் செய்வதை பொறுத்துக் கொள்ளமுடியாது

திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும் என மத்திய அமைச்சரை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

பிளாக்மெயில் செய்யும் தடித்தனத்தைத் தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டமான சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு ரூ. 2 ஆயிரத்து 152 கோடி கல்வி நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை. இந்த நிலையில் புதிய கல்விக்கொள்கையை ஏற்காவிட்டால் தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி கிடையாது என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேட்டியளித்த அவர், “மும்மொழிக் கொள்கையை பிற மாநிலங்கள் ஏற்கும்போது தமிழ்நாடு மட்டும் ஏற்க மறுப்பது ஏன்? புதிய கல்விக்கொள்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டால்தான் கல்வி நிதி விடுவிக்கப்படும். புதிய கல்விக்கொள்கையை தமிழக அரசு ஏற்காத பட்சத்தில் 2 ஆயிரம் கோடி ரூபாயை விடுவிக்க சட்டத்தில் இடமில்லை. அரசியல் காரணங்களுக்காகவே தேசிய கல்விக்கொள்கையை தமிழக அரசு எதிர்க்கிறது என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது என்று மிரட்டுவதை தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஸ்டாலின் எச்சரிக்கை

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: ‘அவர்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் விதிமுறைகளுக்கு வர வேண்டும்’ என்கிறார் ஒன்றியக் கல்வி அமைச்சர். மும்மொழிக் கொள்கையை சட்டத்தின் ஆட்சி என்கிறார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப்பிரிவு மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குகிறது? எனக் கல்வி அமைச்சரால் கூற முடியுமா? மாநிலங்களால் ஆனதே இந்திய ஒன்றியம். ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளது தான் கல்வி. அதற்கு ஒன்றிய அரசு ஏகபோக எஜமானர்கள் அல்ல.

“மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது” என்று பிளாக்மெயில் செய்யும் தடித்தனத்தைத் தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்.

எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம். உங்கள் தனிச்சொத்தைக் கேட்பது போல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

துணை முதலமைச்சர்

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது என்பதை நாம் அரசியலால் தூண்டப்பட்டு (Politically Motivated) பேசுவதாக மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் சொல்லி உள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். மொழி, இன உணர்வு வந்தப் பிறகு தான் தமிழர்களுக்கு அரசியலே வந்தது; எங்கள் இடுப்பில் கொள்கை எனும் வேட்டி ஏறிய பிறகு தான், தோளில் பதவி எனும் துண்டு வந்தது.

மிரட்டுவதா?

நிதி உரிமையைக் கேட்டால், இந்தியை ஏற்க வேண்டும் என்று தமிழ்நாட்டை மிரட்டுவதா?. தமிழ்நாட்டைச் சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம். ரொம்பவும் வேண்டாம் – சுதந்திரத்துக்கு பிறகான தமிழ்நாட்டின் வரலாற்றைப் படித்தாலே இது உங்களுக்குப் புரியும்.

மாநிலங்கள் சேர்ந்து உருவாக்கியது தான் மத்திய அரசு. எங்கள் குழந்தைகளின் கல்விக்கான நிதியை தான் நாங்கள் கேட்கிறோம். நீங்கள் கொடுக்கும் இடத்திலும் நாங்கள் பெறும் இடத்திலும் இருப்பதாய் நினைத்து தலைக்கனம் காட்ட வேண்டாம். தமிழ்நாடு பொறுக்காது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

விஜய் அறிக்கை

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவிப்பது ஜனநாயகத்திற்கு எதிரான, பாசிச அணுகுமுறை என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன? ஜனநாயகத்தின் நான்காவது தூணான இதழியல் துறைக்கு உரியதான பத்திரிகை சுதந்திர தர்மம் காக்கப்பட வேண்டும். நூற்றாண்டு காணும் விகடனின் இணையதளப் பக்கம் முடக்கப்பட்டதற்கு மத்திய அரசுதான் காரணம் என்கிற கருத்து நிலவுகிறது. பத்திரிகை, ஊடகங்களால் வெளியிடப்படும் கருத்துகள் தவறானவையாகவோ, குற்றம் சுமத்துபவையாகவோ இருந்தால் நீதிமன்றம் மூலம் தீர்வு காண வேண்டுமே தவிர, கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் வகையில் செயல்படுவது, அரசியல் சாசன உரிமையைக் கேள்விக்குறி ஆக்குவதன்றி வேறென்ன?

பாசிச அணுகுமுறை

மாநில மொழிக் கொள்கைக்குச் சவால் விடுத்து, தமிழகத்திற்கு நிதி ஒதுக்கமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவிப்பதும், விகடன் இணையதளப் பக்கத்தை முடக்கியதும் ஜனநாயகத்திற்கு எதிரான, கண்டனத்திற்கு உரிய பாசிச அணுகுமுறையே. பாசிச அணுகுமுறைகளை எந்த வடிவத்தில் யார் கையிலெடுத்தாலும், அது மத்திய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் மக்கள் பக்கம் நின்று தமிழக வெற்றிக் கழகம் எந்நாளும் தீர்க்கமாக எதிர்க்கும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

சீமான்

‘‘அதிகாரத்தை வைத்துக் கொண்டு ஆடாதீர்கள்” என்று மும்மொழிக் கொள்கை தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி சார்பில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் அவிநாசியில் இன்று( பிப்.16) நடந்தது. இதில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் மும்மொழிக் கொள்கை பற்றி கூறியதாவது:

இந்தியா ஒரே தேசியம் அல்ல. அது பல தேசங்களின் ஒன்றியம். பல மொழி பேசும், பல்வேறு இன மக்கள் வாழும் இந்த நாட்டில் ஒவ்வொரு மொழிக்கும் கலை, கலாச்சாரம், மொழி, வழிபாடு வெவ்வேறாக உள்ளது. தமிழகத்துக்குள்ளும் பல்வேறு சாதி, குடி கட்டமைப்புகள் உள்ளன.

அனைத்து மக்களின் மொழி வழி தேசியத்துக்கும், முன்னுரிமை தரப்பட வேண்டும். அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுரிமை தரப்பட வேண்டும் என அம்பேத்கர் சொல்லியிருக்கிறார். மும்மொழிக் கொள்கையில் என்ன இருக்கிறது?

புதிய கல்விக் கொள்கை, கட்டாயமாக இந்தி மொழியைக் கற்கச் சொல்கிறது. பிரதமருக்கும், அமைச்சர்களுக்கும் தேர்வு வைத்து தேர்வு செய்யப்பட வேண்டும் என்றால் அதை ஏற்றுக் கொள்வார்களா.?

பல மொழி இனத்தை அழித்து ஒரே தேசமாக கட்டமைக்க முயற்சி நடக்கிறது. இந்தியாவில் 22 மொழிகள் ஆட்சி மொழியாக இருந்தால் என்ன? வரியை மட்டும் பெற்றுக் கொள்கின்றனர்? ஆனால் அங்கிருந்து கடிதம் அனுப்பும்போது இந்தியில் அனுப்புகின்றனர்? அவ்வளவு ரோஷம் இருப்பவர்கள் தமிழ்நாட்டின் வரியை ஏன் பெறுகிறீர்கள்? கட்டாயமாக இந்தியை படிக்கச் சொல்வது சரியல்ல.

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கே மனமுதிர்ச்சி இல்லை. நீட் தேர்வு அச்சத்தில் உயிரிழக்கின்றனர். இந்த நிலையில் 3, 5 மற்றும் 8-ம் வகுப்புகளில் பொதுத் தேர்வு கொண்டு வருவது எப்படி ஏற்க முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *