பழனி முருகன் கோவிலில் காவடி எடுத்து அண்ணாமலை வழிபாடு

Spread the love

பதிவு: புதன்கிழமை, பிப்ரவரி 12, 2025, 06:`45 AM

பழனி,

பழனி முருகன் கோவிலில், தைப்பூச திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது.

தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவிலில் நேற்று தைப்பூச விழா கொண்டாடப்பட்ட நிலையில், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை நேற்று இரவு காரில் பழனிக்கு வந்தார். பின்னர் அடிவாரத்தில் இருந்து மயில் காவடி எடுத்து திருஆவினன்குடி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு அருள்ஜோதி வீதி வழியாக காவடி எடுத்தபடி பாதவிநாயகர் கோவில் படிப்பாதையை வந்தடைந்தார்.

தைப்பூசத்தையொட்டி தற்போது அந்த பாதை, ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. அதாவது மலைக்கோவிலில் சாமிதரிசனம் முடிந்து பக்தர்கள் வெளியேறுவதற்காக, அந்த பாதை அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால் வெளியேறும் பாதை வழியாக அண்ணாமலை மற்றும் அவரது கட்சியினர் செல்ல முயன்றனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், இது பக்தர்கள் வெளியேறும் பாதை என்றும், குடமுழுக்கு அரங்கு வழியாக செல்லுமாறும் அறிவுறுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இருப்பினும் அண்ணாமலை மற்றும் கட்சியினர் அந்த பாதை வழியாகவே மலைக்கோவிலுக்கு சென்றனர். பின்னர் சாமி தரிசனத்தை முடித்த அண்ணாமலை மற்றும் கட்சி நிர்வாகிகள் மீண்டும் படிப்பாதை வழியாக இறங்கி அடிவாரத்துக்கு வந்தடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *