ஏற்காட்டில் பழங்குடியின ஏகலைவா அரசு பள்ளி மாணவிகள் 10 பேருக்கு பாலியல் தொந்தரவு – போக்சோ வழக்கில் ஆசிரியர் கைது

Spread the love

பதிவு: திங்கட்கிழமை, பிப்ரவரி 10, 2025, 06:`55 AM

ஏற்காடு,

ஏற்காட்டில் உள்ள ஏகலைவா பள்ளி பழங்குடியின மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அறிவியல் ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் பழங்குடியினத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் படிக்கும் அரசு ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பாடம் சொல்லித் தரப்படுகிறது. இந்த பள்ளியில் ஏற்காடு, வாழப்பாடி, ஆத்தூர், கருமந்துறை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள்.

இப்பள்ளியில் பெத்த நாயக்கன்பாளையம், நெய்யமலையை சேர்ந்த இளையகண்ணு (வயது 37) என்பவர் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவர் 10 மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவிகளுக்கு அறிவியல் பாடங்களை எடுத்து வந்தார். இவர் பல ஆண்டுகளாக மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை இவர் மீது பழங்குடியினர் நலத்துறைக்கு புகார்கள் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், இவருக்கு மலைவாழ் மக்கள் சங்கத்தின் செல்வாக்கு இருந்ததால் அதிகாரிகள் இவரை கண்டித்து மட்டும் அனுப்பி வைத்துள்ளனர்.

கடந்த 5ம் தேதி சேலம் குழந்தைகள் நல அலுவலர்கள், பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். அப்போது 12 மாணவிகள், இளையகண்ணுவின் பாலியல் சீண்டல் குறித்து புகார் தெரிவித்தனர்.

அதன்பேரில் பள்ளி தலைமை ஆசிரியர், இந்த புகார் குறித்து கல்வித்துறை அதிகாரிகள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழு அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தார். இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள், ஏற்காட்டில் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று விசாரித்தனர். அதில், பள்ளி மாணவிகள் 10 பேருக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து அவரை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்தனர். பள்ளி மாணவி ஒருவர், சேலம் கொண்டலாம்பட்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில் இளையகண்ணு மீதான குற்றச்சாட்டு உறுதியானது. இதனையறிந்த அவர் தலைமறைவானார். இந்நிலையில் சென்னையில் நேற்று, இளையகண்ணுவை போக்சோ வழக்கில் கைது செய்த போலீசார் ஏற்காடு அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.

பெண்கள் பாதுகாப்பாக நடமாடும் நிலை எப்போது?

இது குறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சேலம் மாவட்டம் ஏற்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 மாணவிகளை பாலியல் கொடுமை செய்ததாக அதே பள்ளியின் அறிவியல் ஆசிரியர் இளைய கண்ணு என்பவர் கைது செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன. அரசு பள்ளிகள் மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற இடங்களாக மாறி வருவது கண்டிக்கத்தக்கது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் அரசு பள்ளியில் பயின்ற மாணவி ஒருவர், அதே பள்ளியில் பணியாற்றும் 3 ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தமிழ்நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதேபோல், திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தனியார் பள்ளியில் பயின்று வந்த இரு மாணவிகள் அதே பள்ளியின் நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டதும் பெற்றோர்களிடம் பெரும் அச்சத்தை உருவாக்கியது.

கல்வியையும், பாதுகாப்பையும் வழங்க வேண்டிய அரசு பள்ளிகளும், கல்லூரிகளும் பெண் குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் மையங்களாக மாறினால், இனிவரும் காலங்களில் பள்ளிகளுக்கு பெண் குழந்தைகளை அனுப்புவதற்கு பெற்றோரே அஞ்சும் நிலை உருவாகி விடும். இந்தக் கொடுமைகள் எப்போது முடிவுக்கு வரும்? என்ற ஏக்கமும், தமிழ்நாட்டில் பெண்கள் சுதந்திரமாக நடமாடும் நிலை எப்போது ஏற்படும் ? என்ற எதிர்பார்ப்பும் தமிழ்நாட்டு மக்களின் மனங்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றன.

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிப்பதன் வாயிலாகவும், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் பாதுகாப்பை உறுதி செய்வதன் வாயிலாகவும் பெண்கள் சுதந்திரமாக நடமாடும் நிலையை அரசு ஏற்படுத்த வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *