2025-26ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்… முக்கிய அம்சங்கள் அதிரடி அறிவிப்புகள்!

Spread the love

பதிவு: ஞாயிறுக்கிழமை, பிப்ரவரி 02, 2025, 06:`45 AM

புதுடில்லி,

நடுத்தர வருவாய் பிரிவினரின் வரிச் சுமையை குறைக்கும் வகையில், ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுவோர் இனி வரி செலுத்த தேவையில்லை என, மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

இந்த வருமான உச்ச வரம்பு, கடந்த ஆண்டு 7 லட்சம் ரூபாயாக இருந்தது; நேற்றைய அறிவிப்பின்படி, ஆண்டு வருமானம் 12.75 லட்சம் ரூபாயாக இருந்தாலும், வரிக்கழிவை முறையாக பயன்படுத்தினால், வரி செலுத்த தேவையில்லை.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து எட்டாவது முறையாக மத்திய பட்ஜெட்டை பார்லிமென்டில் நேற்று தாக்கல் செய்தார்.

அதில், முக்கிய அம்சமாக வருமான வரி விலக்கு உச்ச வரம்பு, 7 லட்சத்தில் இருந்து 12 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது, புதிய முறையில் வரி செலுத்துவதை தேர்வு செய்வோருக்கு பொருந்தும்.

ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் மற்றும் 75,000 ரூபாய் நிலையான வரிக்கழிவும் சேர்த்தால், 12.75 லட்சம் ரூபாய் வரை இனி வருமான வரி செலுத்த தேவையில்லை.

ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுவோர், 4 லட்சம் ரூபாய் முதல் கணக்கிட்டு, அந்தந்த வரி அடுக்குகளின்படி வருமான வரி செலுத்த வேண்டும்.

இதிலும், வரி அடுக்குகள் மாற்றப்பட்டுள்ளதால், 8 லட்சம் வருமானத்துக்கு செலுத்த வேண்டிய வரியில் 30,000 ரூபாயும், 24 லட்சம் வருமானத்துக்கு செலுத்த வேண்டிய வரியில் 1,10,000 ரூபாயும் மிச்சமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேறு சிறப்பு வருவாய் ஏதுமில்லாத மாத சம்பளக்காரர்கள், ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை வருமானத்துக்கு வரி செலுத்த தேவையில்லை என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அப்போது, பிரதமர் மோடி உட்பட ஆளும் கூட்டணி எம்.பி.,க்கள் அனைவரும் மேஜையை தட்டி பாராட்டு தெரிவித்தனர்.

வரி செலுத்துவோருக்கு கூடுதல் தொகை மிச்சமாகும் வகையில் வரி அடுக்குகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாகவும், இதனால் நடுத்தர மக்களின் கையில் கூடுதல் தொகை இருக்கும்; இது, அவர்களது வாங்கும் சக்தியை அதிகரிக்கவும், சேமிப்பு மற்றும் முதலீட்டை மேற்கொள்ள உதவும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

வருமான வரியில் கூடுதலாக 5 லட்சம் ரூபாய் விலக்கு அளித்திருப்பதன் வாயிலாக, அரசுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்படும் என்றாலும், நடுத்தர மக்களுக்கு நன்மை கிடைக்கச் செய்வதே அரசின் நோக்கம் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.

வருமான வரி விலக்கை 12 லட்சம் ரூபாய் வரை அதிகரித்திருப்பதன் வாயிலாக, பொருட்களின் நுகர்வு அதிகரித்து உற்பத்தி துறை ஊக்கம் பெறும் என்றும், இது நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க துாண்டுதலாக அமையும் என்றும் நிதிச் சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சீனா மற்றும் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளுடன் உற்பத்தி, ஏற்றுமதியில் இந்தியா போட்டியிடவும், விரைவான பொருளாதார வளர்ச்சி காணும் நாடாக நீடிக்கவும் வருமான வரி விலக்கு அதிகரிக்கப்பட்டிருப்பது உதவும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

புதிய வருமான வரி மசோதா அடுத்த வாரத்தில் அறிமுகப்படுத்தப்படும்; முதலில் நம்பிக்கை, பிறகு ஆய்வு என்ற அடிப்படையில், வழக்குகளை குறைக்கும் நோக்கில் அது இருக்கும் என அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

  • பாதுகாப்பான குடிநீர் வழங்கும் ஜல்ஜீவன் திட்டம் 2028ம் ஆண்டு வரை நீட்டிப்பு.
  • ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோர் புதிய வருமான வரி விகிதத்தின் கீழ் வரி செலுத்த தேவையில்லை.
  • வரி விலக்கு அறிவிப்பால் ஆண்டுக்கு நேரடி வரி வருவாய் ரூ. 1 லட்சம் கோடியும், மறைமுக வரி வருவாய் ரூ.2,600 கோடியும் அரசுக்கு வரி இழப்பு ஏற்படும்.
  • மின்னணு வாகனங்கள், செல்போன் பேட்டரி உற்பத்திக்கு வரிச் சலுகை; புதிய ஏற்றுமதி ஊக்குவிப்பு வாரியம் அமைக்கப்படும்.
  • புற்றுநோய் மருந்து உட்பட 36 வகையான உயிர்காக்கும் மருந்துகளுக்கு இறக்குமதி வரியிலிருந்து விலக்கு.
  • ஸ்விக்கி, சோமேட்டோ ஊழியர்களின் நலனுக்காக அடையாள அட்டை; சுகாதாரம், வேளாண் உள்ளிட்ட 3 துறைகளில் AI மையம்.
  • மருத்துவ படிப்புக்கு கூடுதலாக 10,000 இடங்கள்; 5 ஆண்டுகளில் மருத்துவ படிப்புக்கு 75,000 கூடுதல் இடங்கள்: ஐ.ஐ.டி.,களில் இந்த ஆண்டு கூடுதலாக 65 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கை.
  • கிராமப்புறங்களில் 1.5 லட்சம் தபால் நிலையங்கள்.
  • காலணிகள் தயாரிக்கும் துறையில் 22 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த நிதி வசதி.
  • பட்டியலின பெண்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 2 கோடி கடன் உதவி வழங்கப்படும்.
  • பீஹாரில் உணவு பதப்படுத்துதலுக்காக தேசிய நிறுவனம் அமைக்கப்படும்.
  • பீஹாரில் மக்கானா (தாமரை விதை) உற்பத்திக் கூடம் அமைக்கப்படும்.
  • ரூ.1கோடியில் நகரங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும்.
  • பாரதத்தை வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக்கும் பணியில் தீவிரம்.
  • வருமான வரி தாக்கல் செய்யும் காலம் 4 ஆண்டுகளாக அதிகரிப்பு.
  • வீட்டு வாடகை டி.டி.எஸ். பிடித்த வரம்பானது ரூ. 6 லட்சமாக உயர்வு.
  • 2 சொந்த வீடுகள் வரை வரிச்சலுகைகள் பெறலாம்.
  • அணு உலைகள் உருவாக்க 20 ஆயிரம் கோடி நிதி.
  • 120 புதிய வழித்தடங்களில் புதிய விமான சேவை.
  • அரசு உயர் நிலை பள்ளிகளில் பிராட்பேண்ட் மூலம் இணைய வசதி.
  • கூட்டுறவு, சிறு தொழில் நிறுவனத்திற்கு கூடுதல் கடன் உதவி.
  • வேளாண் உற்பத்தியை அதிகரிக்க புது திட்டம்.
  • கிசான் கார்டு மூலம் விவசாய கடன் ரூ. 5 லட்சமாக உயர்வு.
  • புதிய வருமான வரி மசோதா விரைவில் தாக்கல்.
  • பருப்பு உற்பத்தியை அதிகரிக்கும் சிறப்பான சாகுபடியை தரும் விதைகள் வழங்கும் திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும்.
  • அசாமில் யூரியா உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்படும்.
  • பருத்தி உற்பத்தியை அதிகரிக்க திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
  • கிசான் கடன் அட்டை மூலம் 7.7 கோடி விவசாயிகள் குறுகிய கால கடன்பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
  • பட்டியல், பழங்குடி, பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த மகளிருக்கு, புதிதாக தொழில்முனைவோருக்கு ரூ.2 கோடி வரை கடன் உதவி வழங்கப்படும்.
  • காலணி மற்றும் தோல் துறையில் 22 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கும் வகையில், சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.
  • இந்தியாவில் பொம்மை உற்பத்தித் துறை சந்தைக்கு சர்வதேச மையம் உருவாக்கும் வகையில் சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *