கேரளாவை உலுக்கிய கொலை வழக்கு – கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து மாணவரை கொன்ற வழக்கில், காதலி கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை

Spread the love

பதிவு: செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025, 01:40 AM

திருவனந்தபுரம்,

கேரளாவில் காதலனுக்கு விஷம் கொடுத்து கொன்ற காதலி கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை விதித்து கேரளா ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

கன்னியாகுமரி மாவட்ட எல்லையான கேரள மாநிலம் பாறசாலை என்ற பகுதியைச் சேர்ந்த 23 வயது ஷரோன் ராஜ் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி கிரீஷ்மா என்பவரை காதலித்தார். இந்த காதலுக்கு இரு தரப்பு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது இந்நிலையில் கிரீஸ்மாவுக்கும், ராணுவ அதிகாரிக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. நிச்சயதார்த்தத்திற்கு பின்னால் கிரீஷ்மா தனது காதலனை சந்திப்பதை குறைத்துக் கொண்டதாக தெரிகிறது.

மூலிகை விஷம்

தொடர்ந்து தொல்லை தரும் ஷரோனை கொலை செய்ய கிரீஷ்மா முடிவு செய்தார். கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 14-ம் தேதி ஷரோன் ராஜை, கிரீஸ்மா தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். ஆயுர்வேத பானம் என கூறி ஷரோன் ராஜ்க்கு கிரீஸ்மா ஒரு பானத்தை கொடுத்துள்ளார். குடித்ததும் கசப்பாக இருக்கிறதே என கேட்க, ஆயுர்வேத பானம் கசப்பாகத்தான் இருக்கும் என கிரிஷ்மா சொன்னதை ஏற்று முழுவதுமாக குடித்துள்ளார். ஆனால், மூலிகை விஷம் கலக்கப்பட்ட அந்த பானத்தை குடித்துவிட்டு வீட்டிற்கு சென்றவர், இரவில் பலமுறை வாந்தி எடுத்துள்ளார்.

உடனடியாக திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷரோன் ராஜ், உடல் பாகங்கள் செயல் இழந்து சில நாட்களில் இறந்தார். இதையடுத்து அவரது குடும்பம் கிரீஸ்மா மீது புகார் அளித்தது. தொடர்ந்து கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறையில் இருந்த கிரீஸ்மா ஜாமினில் வெளியேவந்தார்.

குறைந்த பட்ச தண்டனை – வழங்க கோரிக்கை

இதுகுறித்த வழக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் கிரீஷ்மா மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட அவரது தாய்மாமா நிர்மல்குமார் ஆகியோரை குற்றவாளிகளாக நெய்யாற்றின்கரை கோர்ட் கடந்த 17- ந் தேதி அறிவித்தது. இந்நிலையில் தண்டனை விவரம் நேற்று முன் தினம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று முன்தினம் கோர்ட் கூடியது.

அப்போது குற்றவாளிகளான இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதி, கிரீஷ்மாவிடம் ஏதாவது கூற விரும்புகிறீர்களா? என கேட்டார். அப்போது, கிரீஷ்மா நீதிபதியிடம் ஒரு கடிதத்தை கொடுத்தார். அந்த கடிதத்தில், “எனக்கு தற்போது 24 வயது ஆகிறது. ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். மேலும் படிக்க விரும்புகிறேன். எனது பெற்றோருக்கு நான் ஒரே மகள். எனவே குறைந்த பட்ச தண்டனை வழங்க கேட்டு கொள்கிறேன்” என்று கூறப்பட்டிருந்தது.

ஈவு இரக்கமற்றவர்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு வக்கீல், “கிரீஷ்மா ஈவு, இரக்கமற்றவர், அவருக்கு கருணை காட்ட தேவையில்லை. அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்” என வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தண்டனை விவரங்களை இன்று (20-ந்தேதி) அறிவிப்பதாக கூறி ஒத்திவைத்திருந்தார்.

தூக்கு தண்டனை – 15 ஆண்டுகள் சிறை

இந்நிலையில் காதலனை கொன்ற வழக்கில் முதன்மை குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்த காதலி கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை விதித்து கேரள ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அவரது மாமா நிர்மல் குமாருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் கடத்தல் குற்றத்திற்காக பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், விசாரணையைத் தவறாக வழிநடத்த முயன்றதற்காக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் காதலி கிரீஷ்மாவுக்கு விதிக்கப்பட்டது. இந்த உத்தரவை நெய்யாற்றின்கரை கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஏ.எம். பஷீர் வழங்கினார்.

முன்னதாக விசாரணை நீதிமன்றம் கிரீஷ்மாவை ஐபிசி பிரிவுகள் 364 (கடத்தல் அல்லது கடத்தல், கொலைக்குக் காயப்படுத்துதல்), 328 (விஷத்தால் காயப்படுத்துதல்), 302 (கொலைக்கான தண்டனை) மற்றும் 201 (ஆதாரங்களை மறைத்தல்) ஆகியவற்றின் கீழ் குற்றவாளி என கூறியிருந்தது.

அவரது மாமா நிர்மலாகுமாரன் நாயரும் பிரிவு 201 (ஆதாரங்களை மறைத்தல்) இன் கீழ் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டது. அதே நேரத்தில் அவரது தாயார் ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *