பரந்தூர் விமான நிலைய திட்டத்தில் – தி.மு.க. நாடகமாடுகிறது: தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் குற்றச்சாட்டு

Spread the love

பதிவு: செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025, 01:20 AM

சென்னை,

பரந்தூர் விமான நிலைய திட்டத்தில் – தி.மு.க. நாடகமாடுகிறது: விஜய் குற்றச்சாட்டு – 8 வழி சாலையை எதிர்த்தவர்கள் பரந்தூர் திட்டத்தை ரத்து செய்ய மறுப்பது ஏன்? – ‘உங்களுடன் நான் இருப்பேன்’: போராட்ட குழுவினரிடம் உறுதி

பரந்தூர் விவகாரத்தில் தி.மு.க. மக்களை ஏமாற்றி நாடகமாடுகிறது என்று தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் குற்றஞ்சாட்டினார்.

பரந்தூர் மக்களுடன் உறுதியாக நிற்பேன். சட்டப் போராட்டம் நடத்துவோம் என்றும் அவர் கூறினார்.

பரந்தூர் விமான நிலைய திட்டத்தில் ஆட்சியாளர்களுக்கு ஏதோ லாபம் உள்ளது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

விஜய்க்கு விவசாயிகள் நெற்கதிர்களை வழங்கி பச்சைத்துண்டு அணிவித்தார்கள்.

காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி, சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 13 கிராமங்களில் இருந்து 5133 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து 900 நாட்களுக்கும் மேலாக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை பல்வேறு அரசியல் கட்சிகள் தலைவர்கள் நேரில் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்து வந்தனர்.

பரந்தூர் மக்களுக்கு ஆதரவாக தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் விக்கிரவாண்டியில் நடந்த மாநாட்டிலேயே தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இத்தகைய சூழலில்தான் தொடர் போராட்டம் நடத்தி வரும் கிராம மக்களை சந்திக்க விஜய் திட்டமிட்டார். போராட்டத்தில் ஈடுபடும் கிராம மக்களையும் போராட்ட குழுவினரையும் சந்தித்து ஆதரவு தெரிவிக்க தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சார்பில் காவல் துறையிடமும் மாவட்ட நிர்வாகத்திடமும் அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்தார்.

இதையடுத்து போராட்ட குழுவினரையும் கிராம மக்களையும் இன்று விஜய் சந்திக்க அனுமதி அளித்த காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டது. தனியார் மண்டபத்தில் மட்டுமே மக்களைச் சந்திக்க வேண்டும் என்றும், பிற்பகல் 11.30 மணி முதல் 12.30 மணி வரை மட்டுமே சந்திக்க வேண்டும் என்றும் தெரிவிக்க்கப்பட்டது. பொடவூரில் உள்ள வீனஸ் திருமண மண்டபத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. பரந்தூரில் விஜய் நிகழ்ச்சியில் பங்கேற்க ஆவணங்கள் வைத்திருந்த பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மட்டுமே மண்டபத்தின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அங்கு வந்த பொதுமக்கள், ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை காண்பித்த பிறகே அவர்கள் மண்டபத்துக்குள் செல்ல போலீசார் அனுமதித்தனர். வெளிநபர்கள் மண்டபத்துக்குள் செல்ல போலீசார் அனுமதி அளிக்கவில்லை. முன்னதாக இதற்கான ஏற்பாடுகளை அக்கட்சியினர் தீவிரமாக செயல்படுத்தி வந்த நிலையில், அப்பகுதியில் சோதனை சாவடிகளில் அமைத்து போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இதைத் தொடர்ந்து பொடவூரில் உள்ள வீனஸ் திருமண மண்டபத்தில் போராட்ட குழுவினரை சந்திக்க த.வெ.க. தலைவர் விஜய் பிரச்சார வேனில் வந்தார். கழுத்தில் கட்சி துண்டு அணிந்து வேனில் நின்றபடி வந்தார். அவரை போராட்டக்குழுவினர் ஆரவாரம் செய்து வரவேற்றனர். தனியார் திருமண மண்டப வாசலில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் திறந்த வேனிலிருந்து விஜய் பேசினார். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

அப்போது அவர் பேசியதாவது:

கிட்டத்தட்ட 910 நாட்களுக்கு மேலே, உங்க மண்ணுக்காக போராடி கொண்டு இருக்கிறீர்கள். உங்க போராட்டத்தை பற்றி ராகுல் என்ற சின்ன பையன் பேசுவதை கேட்டேன். அந்த குழந்தையின் பேச்சு மனதை ஏதோ செய்தது. உடனே உங்க எல்லோரையும் பார்க்கணும், சந்தித்து பேச வேண்டும் என்று தோணுச்சு.

உங்களுடன் நிற்பேன். தொடர்ந்து நிற்பேன் என்று சொல்வதற்காக வந்திருக்கிறேன்.

இந்த நாட்டிற்கு முக்கியமானவர்கள் விவசாயிகள். உங்களது காலடி மண்ணை தொட்டு எனது பயணத்தை துவங்க முடிவு செய்து வந்திருக்கிறேன். இதற்கு சரியான இடம் இது தான். எனது கள அரசியல் பயணத்தை உங்கள் ஆசீர்வாதத்துடன் இங்கிருந்து துவங்குகிறேன்.

எங்களது முதல் மாநில மாநாட்டில் கட்சியின் கொள்கைகளை சொன்னேன். இயற்கை வளத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் அந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றினேன். பரந்தூரில் விவசாய நிலங்களை அழித்து விமான நிலையம் அமைக்க கூடாது என்றும் இந்த திட்டத்தை ஆளுங்கட்சி கைவிட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றினோம்.

போராட தயங்க மாட்டேன்

விவசாயிகளை பாதுகாக்க சட்டப்போராட்டம் நடத்த தயங்க மாட்டேன். இந்த பிரச்சினையில் உங்களுடன் உறுதியாக நிற்பேன். இங்கு இந்த திட்டத்தை கொண்டு வந்தால் அது மக்கள் விரோத அரசாகத்தான் இருக்கும்.

எதிர்க்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டையும், ஆளுங்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு எதிர்ப்பான நிலைப்பாட்டையும் ஆளும் அரசு எடுக்கிறது.

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் திரும்பப் பெறவேண்டும்.

ஆளுங்கட்சியின் நாடகத்தை மக்கள் இனி நம்பமாட்டார்கள், மக்கள் இனி சும்மாவும் இருக்க மாட்டார்கள். வளர்ச்சி என்ற பெயரில் நடைபெறும் அழிவு மக்களை பாதிக்கும். இயற்கை வளம் காப்போம் என்பது நமது கொள்கை, ஓட்டு அரசியலுக்காக நான் பேசவில்லை. விமான நிலையம் வரக்கூடாது என்று நான் கூறவில்லை. ஆனால், இந்த இடத்தில் வரக்கூடாது என கூறுகிறேன் விமான நிலைய திட்டத்தை நான் எதிர்க்கவில்லை. பரந்தூரில் விமான நிலையம் வேண்டாம் என்றுதான் கூறுகிறேன்.

மக்களை அழிக்காதீர்கள்

வளர்ச்சி முக்கியம்தான், ஆனால் வளர்ச்சி என்ற பெயரில் மக்களை அழிக்காதீர்கள். விமான நிலைய திட்டத்தை எதிர்க்கவில்லை. ஆனால், விவசாய நிலங்கள் இல்லாத பகுதியில் இந்த திட்டத்தை அமல்படுத்துங்கள். பரந்தூர் மக்களுக்காக உறுதியாக இருப்பேன், சட்ட போராட்டம் நடத்துவோம். விவசாய நிலங்களை அழித்து பரந்தூர் விமான நிலையம் வருவதை ஏற்க இயலாது.

ஒவ்வொரு வீட்டிற்கும் ரொம்ப முக்கியமானவர்கள் அந்த வீட்டில் இருக்கும் பெரியவர்கள் தான். அதே மாதிரி நம்ம நாட்டுக்கு ரொம்ப முக்கியமானர்கள் உங்களை மாதிரி விவசாயிகள் தான். விவசாய நிலங்களை அழிப்பது மக்கள் விரோத அரசாகத்தான் இருக்கும். 90% நீர் மற்றும் விவசாய நிலங்களை அழித்து விமான நிலையத்தை கொண்டு வரவுள்ளனர்.

இந்த திட்டத்தில் ஆளுங்கட்சிக்கு லாபம்

பரந்தூர் விமான நிலைய திட்டத்தில் ஆட்சியாளர்களுக்கு ஏதோ லாபம் உள்ளது. 8 வழிச்சாலையை எதிர்க்கட்சியாக இருக்கும் போது எதிர்த்தீர்கள். அதே நிலைப்பாட்டை இங்கேயும் எடுக்க வேண்டும்.

அரிட்டாபட்டி மக்கள் போலதான் பரந்தூர் மக்களையும் பார்க்க வேண்டும். டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்தது போல பரந்தூர் திட்டத்தையும் ரத்து செய்யவேண்டும். பரந்தூர் ஊருக்குள் வர எனக்கு ஏன் தடை என்று புரியவில்லை. தவெக தொண்டர்கள் நோட்டீஸ் தரக்கூட தடை விதித்தார்கள். உங்கள் குல தெய்வங்கள் மீதான நம்பிக்கை வீண் போகாது. நம்பிக்கையோடு இருங்கள்.

நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்.

இவ்வாறு விஜய் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *