
பதிவு: திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025, 05:`45 AM
மும்பை,
சத்தீஷ்காரில் பிடிபட்டவர் குற்றவாளி அல்ல, நடிகர் சயீப் அலிகானை கத்தியால் குத்தியவரை மும்பை அருகே வைத்து போலீசார் கைது செய்து உள்ளனர்.
மும்பை நகரின் பாந்த்ராவில் பாலிவுட் நடிகர் சயீப் அலிகானின் வீட்டுக்குள் புகுந்து அவர் மீது தாக்குதல் நடத்திய ஒருவர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சயீப் அலிகானை தாக்கிவிட்டு தப்பிய நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அந்த குடியிருப்பின் படிக்கட்டுகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து, குற்றவாளியை காவல்துறையினர் தேடி வந்தனர்.
சந்தேகத்தின் அடிப்படையில் சத்தீஷ்கர் ரயில் நிலையத்தில் ஒருவரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். அவரிடம் சுமார் 5 மணி நேரம் வரை விசாரணை நடந்த நிலையில், தாக்குதல் நடத்திய நபர் அவர் இல்லை என தெரிவித்து, அவரை போலீசார் விடுவித்தனர்.
இந்தநிலையில் மும்பையை அடுத்த தானே பகுதியில் சயீப் அலிகானை தாக்கியவர் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு 100-க்கும் மேற்பட்ட போலீசார் விரைந்தனர்.
நேற்று அதிகாலை 2 மணியளவில் தானே காசர்வடவிலி பகுதியில் உள்ள கழிமுக காட்டுப்பகுதியில் தூங்கிக்கொண்டு இருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
முதல் கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்டவர் வங்கதேசத்தை சேர்ந்த முகமது இஸ்லாம் (வயது 30) என்பது தெரியவந்து உள்ளது.
முகமது இஸ்லாம் 6 மாதங்களுக்கு முன் சட்டவிரோதமாக வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்து உள்ளார். அவர் மும்பை, தானேயில் கட்டுமானம், மதுபான விடுதியில் வேலை பார்த்து வந்து உள்ளார். மேலும் தனது பெயரை விஜய் தாஸ் என மாற்றி சுற்றி வந்ததும் தெரியவந்து உள்ளது.
கைது செய்யப்பட்ட முகமது இஸ்லாமை போலீசார் நேற்று பாந்திரா கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டு அவரை 5 நாள் போலீஸ் காவலில் ஒப்படைத்து உத்தரவிட்டது.இதற்கிடையே சயீப் அலிகானை கத்தியால் குத்தியதை முகமது இஸ்லாம் ஒப்புக்கொண்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.