பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, மக்களுக்கு தலைவர்கள் பொங்கல் வாழ்த்து

Spread the love

பதிவு: செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025, 03:`05 AM

சென்னை,

பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழி உண்டு. நாளை (ஜனவரி14) பொங்கல் திருவிழாவை மக்கள் கோலாகலமாக கொண்டாட தயாராகி வருகின்றனர். மக்களுக்கு அரசியல் தலைவர்கள் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு

லோஹ்ரி, மகர சங்கராந்தி, பொங்கல், மாக் பிஹு பண்டிகைகளை முன்னிட்டு, உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வசிக்கும் அனைத்து நாட்டுமக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரட்டும். இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற நாம் அதிக தீவிரத்துடன் ஒன்றிணைந்து செயல்படுவோம்.

பிரதமர் மோடி

எனது அமைச்சரவை சகாவான கிஷன் ரெட்டியின் இல்லத்தில் நடைபெற்ற சங்கராந்தி மற்றும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களில் பங்கேற்றேன். மிகச்சிறந்த கலாச்சார நிகழ்வையும் கண்டுகளித்தேன்.

இந்தியா முழுவதும் உள்ள மக்கள் சங்கராந்தியையும், பொங்கல் பண்டிகையையும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகின்றனர். நமது கலாச்சாரத்தின் வேளாண் பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள ஏராளமானதும், புதுப்பிக்கத்தக்கதுமான நன்றியின் கொண்டாட்டமாக இது விளங்குகிறது.

சங்கராந்திக்கும், பொங்கல் பண்டிகைக்கும் எனது நல்வாழ்த்துகள். வரவிருக்கும் அறுவடை பருவத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சியும், நல்ல ஆரோக்கியமும், வளமும் கிடைக்க வாழ்த்துகிறேன்.

முதல்வர் ஸ்டாலின்

‘இன்பம் பொங்கும் தமிழ்நாடு’ என்று ஒவ்வொரு இல்லத்தின் வாசலிலும் வண்ணக் கோலமிட்டு தை மகளை வரவேற்போம். தமிழ்த் தாயைப் போற்றிடுவோம். மகிழ்ச்சிப் பெருவிழாவாகப் பொங்கலைக் கொண்டாடுவோம்.

அதிமுக பொதுச்செயலாளர், இ.பி.எஸ்.,

உலகத் தமிழர்கள் எல்லோரும் அன்பு பொங்க, இன்பம் பொங்க, இனிமை பொங்க மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் தைத் திருநாளாம் பொங்கல் திருநாளில், எனதருமைத் தமிழ் மக்கள் அனைவருக்கும் உளமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்

அனைவரின் துயரங்களும் தீர வேண்டும்; நாட்டில் நலம், வளம், நன்மை, அமைதி, மகிழ்ச்சி, சகோதரத்துவம், சமூகநீதி ஆகியவை செழிக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக, தமிழர்களின் வாழ்க்கையில் தைத்திருநாளும், தமிழ்ப் புத்தாண்டும் எல்லா நன்மைகளையும் வழங்கட்டும்.

தமிழக காங்கிரஸ் தலைவர், செல்வப்பெருந்தகை

பொங்கல் திருநாளை தமிழ் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும் கொண்டாடி, அனைத்து உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கிப் பரவ வேண்டுமென மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

முன்னாள் முதல்வர், ஓ.பன்னீர் செல்வம்

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்.இதற்கேற்ப தமிழக மக்களுக்கு வழி பிறக்கும் என்ற நம்பிக்கையை தெரிவித்து இல்லங்கள் தோறும் பொங்கல் பொங்கட்டும். அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கள்

சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் – அரசியல், புலனாய்வு வார இதழ், வாசகர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *