இன்று ஆருத்ரா தரிசனம் – இன்று போகிப் பண்டிகை

Spread the love

பதிவு: திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025, 05:`20 AM

சென்னை,

இன்று ஆருத்ரா தரிசனம். பவுர்ணமி; நடராஜரை தரிசித்து ஆடல்வல்லானின் அருளை பெறுவோம் (மார்கழி 29, ஜனவரி.13)

இராஜவல்லிபுரம் தாமிரசபை செப்பறை அருள்மிகு அழகிய கூத்தர் திருக்கோயில் மார்கழி (ஆருத்ரா தரிசனம்) திருவாதிரை திருவிழாவில் இன்று 8ம் திருநாள் மாலை பச்சை சாத்து தரிசனம் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அழகிய கூத்தர் அருள் பாலித்தார்.

போகி (Bhogi) தமிழ் நாட்காட்டியில் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று அதாவது பொங்கல் திருநாளின் முதல்நாள், இந்தியாவில் கொண்டாடுகின்ற பண்டிகை ஆகும். கிரிகோரியன் நாட்காட்டியின்படி வழக்கமாக இப்பண்டிகை ஜனவரி 13 ஆம் நாளிலும், சில ஆண்டுகளில் ஜனவரி 14 ஆம் நாளிலும் வரும். பரவலாக போகிப் பண்டிகை தமிழ்நாடு, கர்நாடகா ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது.

போகியன்று, வீட்டின் கூரையில் செருகப்படும் பூலாப்பூ, வேப்பிலை, ஆவாரம்பூ, வீட்டில் உள்ள பழைய மற்றும் தேவையில்லாத பொருட்களை புறக்கணித்து வீட்டில் புதியன வந்து புகுதல் வேண்டும் என்ற நம்பிக்கையில் மக்கள் போகிப் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். அன்றைய நாள், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்ற பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும்.

இவற்றோடு பழைய பழக்கங்கள், ஒழுக்கக் கேடுகள், உறவுகளிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் போன்ற வேண்டத்தகாத எண்ணங்களையும் “ருத்ர கீதை ஞான யக்ஞம்” என அழைக்கப்படும் அக்னி குண்டத்தில் எறிந்து பொசுக்கி வீட்டை மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களையும், தவறான எண்ணங்களையும் நீக்க வேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.

பல்வேறு தெய்வீகக் குணங்களை தூண்டுவதன் மூலம் ஆன்மாவை உணர்தல், ஆன்மாவை தூய்மையாக்குதல் போன்ற செயல்பாடுகளை இப்பண்டிகை பிரதிபலிக்கிறது. பெரும் பொங்கல், மகர சங்கராந்தி மற்றும் லோரி எனப்படும் பண்டிகைக்கு முந்தைய நாளில் போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இதையொட்டியே பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி கோலம் இட்டு அழகுபடுத்துவது வழக்கம்.

போகி அன்று, வைகறையில் ‘நிலைப்பொங்கல்’ நிகழ்வுறும். வீட்டின் முன்வாயில் நிலைக்குப் மஞ்சள் பூசி, திலகமிட்டு, தோகை விரிந்த கரும்பொன்றைச் சாத்தி நிற்கச் செய்து வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, குங்குமம் வைத்து, தேங்காய் உடைத்து, கற்பூரம் காட்டி இல்லுறை தெய்வத்தை வணங்குவர். சிறு மணித்துளிகளில் இது முடிவுறும். இதைக் குடும்பத்தலைவி நடத்துவார்.

போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம், மொச்சை, சிறுதானியங்கள், பருப்பு வகைகள் போன்றவை இறைவனுக்கு படைக்கப்படும்.

ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு திருஉத்திரகோசமங்கை கோவிலில் குவிந்த பக்தர்கள்

மரகத நடராஜருக்கு இன்று முழுவதும் அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், திருஉத்தரகோசமங்கையில் மிக பழமையான மங்களேஸ்வரி உடனுறை மங்களநாதர் கோவில் உள்ளது. இங்குள்ள நடராஜர் சந்நிதியில் விலை மதிப்பற்ற ஒற்றை பச்சை நிற மரகத கல்லால் ஆன நடராஜருக்கு மார்கழி மாதத்தில் ஆண்டுக்கு ஒருமுறை நடக்கக்கூடிய சந்தனம் காப்பு படி களைதல், அபிஷேகம், சந்தனம் காப்பிடுதல் மற்றும் ஆருத்ரா தரிசனம் பிரசித்தி பெற்றது.

ஆருத்ரா தரிசனம் திருவிழாவை முன்னிட்டு தினந்தோறும் மங்களநாதர் கோவிலில் சிறப்பு பூஜைகள், சுவாமி, அம்பாள் உற்சவர் அன்னம், ரிஷபம், மயில், பூதகணங்கள், பல்லக்கில் வீதி உலா நடைபெற்றது.

இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வுகளாக, இன்று காலை 8 மணிக்கு மரகத நடராஜருக்கு பூசப்பட்ட சந்தனம் காப்புப் படி களைதல் மற்றும் 32 வகையான அபிஷேகங்கள், மூலிகை தைலம் சாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இன்று (13-ம் தேதி) அதிகாலை 3 மணிக்கு புதிய சந்தனம் காப்பிடுதல் மற்றும் பக்தர்கள் தரிசனம், மாலை மாணிக்கவாசகருக்கு காட்சி கொடுத்தல், கூத்தர் பெருமான் வீதி உலா நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகிறது.

ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு திருஉத்திரகோசமங்கை கோவிலில் பக்தர்கள் குவிந்துள்ளனர். மரகத நடராஜர் கோவிலில் சந்தன காப்பு அகற்றப்பட்டது. ஒரு ஆண்டு கழித்து சன்னதி கதவுகள் திறக்கப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மரகத நடராஜருக்கு இன்று முழுவதும் அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *