சீனாவில் புதிய வகை வைரஸ் பரவல்? இந்தியாவில் தொடர்ந்து கண்காணிப்பு – மத்திய அரசு

Spread the love

பதிவு: சனிக்கிழமை, ஜனவரி 04, 2025, 07:`00 AM

புதுடெல்லி,

சுவாசத் தொற்றுகளை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை வழிமுறைகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று பரவியது. இதனால் பலர் உயிரிழந்தனர். இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவி பேரழிவை ஏற்படுத்தியது.கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு, மக்கள் அனைவரும் அதை மறந்து வரும் நிலையில், சீனாவில் மீண்டும் புதிய வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதாக தகவல்கள் வருகின்றன.

இந்த புதிய வைரஸ் ‘ஹியுமன் மெடா நியூமோ வைரஸ்’ (எச்.எம்.பி.வி.) என்று அழைக்கப்படுகிறது. இந்த வைரஸ் சீனாவில் தற்போது அதிக அளவில் பரவி வருகிறது என்றும், இதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பகிரப்பட்டுள்ளது.

எச்.எம்.பி.வி. தொற்று பாதிப்பால் சீனாவில் உள்ள ஆஸ்பத்திரிகளில் ஏராளமான நோயாளிகள் குவிந்துள்ளதாகவும், உயிரிழப்பு அதிகரிப்பு காரணமாக மயானங்களில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகியுள்ளன.

இது தொடர்பாக மத்திய சுகாதாரப் பணிகள் தலைமை இயக்குநர் அதுல் கோயல் கூறியதாவது:

‘ஹியூமன் மெட்டாநிமோ வைரஸ்’ (ஹெச்எம்பிவி) என்பது சாதாரண சளியை ஏற்படுத்தும் பிற வைரஸ் போன்றதே. இது, இளம்வயதினர் மற்றும் முதியோருக்கு காய்ச்சல், தொண்டை வலி, உடல்வலி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தக் கூடும். சீனாவில் ஹெச்எம்பிவி வைரஸ் வேகமாக பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனவே, இந்தியாவில் சுவாசத் தொற்றுகள் மற்றும் பருவகால புளூ காய்ச்சல் பாதிப்புகளை தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். கடந்த டிசம்பர் மாத தரவுகளின்படி, இப்பாதிப்பு எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிப்பு இல்லை. தற்போதைய சூழலில் யாரும் அச்சப்பட தேவையில்லை.

பொதுவாக குளிர்காலங்களில் சுவாசத் தொற்று அதிகரிக்கும் என்பதால், மத்திய அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்துகள் மற்றும் படுக்கை வசதிகள் தயார்படுத்தப்பட்டுள்ளன. சுவாசத் தொற்றுகளை தடுக்கும் வகையில் பொதுவான முன்னெச்சரிக்கை வழிமுறைகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றார் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *