43 ஆண்டுகளில் முதல்முறை.. பிரதமர் மோடி இன்று குவைத் பயணம்

Spread the love

பதிவு: சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024 08:00 AM

புதுடெல்லி,

43 ஆண்டுகளுக்குப் பிறகு வளைகுடா நாட்டிற்கு இந்தியப் பிரதமர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று மற்றும் நாளை என இரண்டு நாள் பயணமாக, குவைத் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 43 ஆண்டுகளுக்குப் பிறகு வளைகுடா நாட்டிற்கு இந்தியப் பிரதமர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். குவைத்தின் அமீர், ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவின் அழைப்பின் பேரில் இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடைசியாக 1981-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி குவைத் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன்பிறகு தற்போதுதான் பிரதமர் மோடி செல்லவிருக்கிறார். வளைகுடா நாடுகளில் குவைத் தவிர மற்ற அனைத்து நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். சமீபத்தில் குவைத் வெளியுறவுத்துறை மந்திரி அப்துல்லா அலி அல்-யாஹ்யா இந்தியா வருகை தந்தார்.

அப்போது தங்கள் நாட்டிற்கு வருமாறு அலி அல்-யாஹ்யா கேட்டுக் கொண்டார். இதையடுத்து பிரதமர் மோடியின் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. குவைத் நாட்டை பொறுத்தவரை இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் மற்றும் எல்.பி.ஜி ஆகியவற்றை ஏற்றுமதியில் முக்கிய பங்காற்றி வருகிறது. மேலும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் குவைத்தில் தங்கி பல்வேறு வேலைகளை செய்து வருகின்றனர். எனவே பிரதமர் மோடி மேற்கொள்ளும் சுற்றுப்பயணம் இரு நாடுகளுக்கு இடையிலான நல்லுறவை மேம்படுத்துவதுடன், புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

குவைத்தில் பிரதமர் மோடி பயான் அரண்மனையில் தங்கவைக்கப்பட்டு மரியாதை அளிக்கப்படுகிறது. குவைத் தலைமையுடன் உயர்மட்ட விவாதங்களில் ஈடுபடுவதோடு, குவைத் பட்டத்து இளவரசரையும் தனியே சந்திக்க உள்ளார். குவைத் பிரதமருடன் தூதரக அளவிலான பேச்சுக்கள் இருக்கும் என்று கூறப்படுகிறாது. பட்டத்து இளவரசர் அளிக்கும் விருந்திலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

மேலும் சமூக நிகழ்வில் புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் உரையாடவும், தொழிலாளர் முகாமுக்குச் செல்லவும், குவைத் அமீர் சிறப்பு விருந்தினராக 26 வது அரேபிய வளைகுடா கோப்பை தொடக்க விழாவில் கலந்து கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தவும் ஆழப்படுத்தவும் இந்த பயணத்தில் பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளர் அருண் குமார் சாட்டர்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரதமர் மோடி டிசம்பர் 21 மற்றும் 22 ம் தேதிகளில் குவைத் நாட்டின் அமீர் ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவின் அழைப்பின் பேரில் குவைத்துக்குப் பயணம் மேற்கொள்கிறார். இது 43 ஆண்டுகளில் முதல்முறையாக அந்நாட்டிற்கு செல்லும் ஒரு இந்தியப் பிரதமரின் பயணத்தை குறிக்கிறது. எனவே, இது கணிசமான முக்கியத்துவத்தைப் பெறுகிறது” என்று அதில் தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *