செந்தில் பாலாஜி எப்படி அமைச்சராக தொடர்கிறார்? – மீண்டும் கேள்வி கேட்டது சுப்ரீம் கோர்ட்

Spread the love

பதிவு: சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024 04:30 AM

புதுடில்லி,

செந்தில் பாலாஜி அமைச்சராக எப்படி தொடர்கிறார் என்று சுப்ரீம் கோர்ட் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, 471 நாள் சிறைவாசத்திற்குப் பிறகு ஜாமினில் வெளியே வந்தார். பிறகு, மறுநாளே அவர் அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அமைச்சராக அவர் பொறுப்பேற்றதை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த வித்யாகுமார் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அமைச்சர் பதவியில் இல்லை எனக் காரணம் காட்டி ஜாமினை பெற்ற அவர், மறுநாளே மீண்டும் அமைச்சராக பதவியேற்றுள்ளதாகவும், கீழமை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்ற வருவதால், விசாரணை பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டிருந்தார். எனவே, அவரது ஜாமினை ரத்து செய்யக்கோரி மனுதாரர் வலியுறுத்தியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘ஜாமின் பெற்ற மறுநாளே அமைச்சராகி உள்ளீர்கள். இதன்மூலம், இந்த வழக்கில் தொடர்புள்ள சாட்சிகளுக்கு அழுத்தம் உண்டாகாதா? வழக்கின் விசாரணை பாதிக்கப்பட்டால், அமலாக்கத்துறை கோர்ட்டை நாடுவார்கள்,’ எனக் கூறி விசாரணையை ஒத்தி வைத்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, செந்தில் பாலாஜி அமைச்சராக எப்படி தொடருகிறார்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் இது தொடர்பாக உரிய பதிலை வரும் 18ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்த வழக்கில் அமலாக்கத்துறை தங்களின் வாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட் அனுமதியளித்துள்ளது.

அமைச்சர் பதவி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருவதால், செந்தில் பாலாஜிக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *