நடிகர் அல்லு அர்ஜூன் கைது சரியா?

Spread the love

பதிவு: வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024 08:00 PM

ஹைதராபாத்,

நடிகர் அல்லு அர்ஜூன் கைது விவாகரத்தில், தியேட்டருக்கு வருவதாக 2 நாட்கள் முன்பே போலீசிடம் முறைப்படி அனுப்பிய கடிதம் வெளியாகி புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல நடிகர் அல்லு அர்ஜூன் நடித்து வெளியாகி உள்ள புஷ்பா 2 படம் அண்மையில் வெளியாகி வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது. இந்த படத்தின் முதல் நாள் காட்சியை காண நடிகர் அல்லு அர்ஜூன், ஹைதராபாத்தில் உள்ள பிரபல தியேட்டருக்கு படக்குழுவினருடன் சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ரேவதி என்ற பெண் பலியானார்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக, தியேட்டர் உரிமையாளர், மேலாளர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். தியேட்டருக்கு வருவதாக எந்த தகவலும் முன்கூட்டியே தெரிவிக்காததால் அசாதாரணமான சம்பவம் நடந்ததாக கூறி அல்லு அர்ஜூன் மீதும் வழக்கு பதிந்த போலீசார், அவரை இன்று (டிச.13) கைது செய்தனர். அவரை 14 நாட்கள் காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டது. அதே நேரத்தில் அவரது தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த தெலுங்கானா ஐகோர்ட், இடைக்கால ஜாமீன் வழங்கி உள்ளது.

இந் நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக டிசம்பர் 2ம் தேதியே அல்லு அர்ஜூன் படக்குழுவினருடன் வருகிறார், பாதுகாப்பு தாருங்கள் என்று காவல்துறைக்கு தியேட்டர் நிர்வாகம் எழுதிய கடிதம் வெளியாகி இருக்கிறது. அதில் டிசம்பர் 4ம் தேதி அல்லு அர்ஜூன் படக்குழுவினருடன் தியேட்டருக்கு வர உள்ளார், பாதுகாப்பு தருமாறு எழுதப்பட்டு உள்ளது.

சிக்கட்பள்ளி போலீஸ் உதவி கமிஷனருக்கு எழுதப்பட்ட அந்த கடிதத்தில் சம்பந்தப்பட்ட போலீஸ் உயரதிகாரி பெற்றுக் கொண்டதற்கான முத்திரையும் வைக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு அடுத்த நாளான டிச.5ம் தேதியும் படக்குழுவினர் எங்கு, எத்தனை மணிக்கு செல்ல உள்ளனர் என்ற முழு விவரங்களும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

முறைப்படி நடிகர் அல்லு அர்ஜூனும், படக்குழுவினரும் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்ட நிலையில் இந்த கடித விவகாரம் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *