
பதிவு: சனிக்கிழமை, நவம்பர் 23, 2024, 07:10 AM
புதுடில்லி,
மஹாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8:00 மணிக்கு துவங்குகிறது.
மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா, பா.ஜ., மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைமையிலான ‘மஹாயுதி’ கூட்டணி ஆட்சியில் உள்ளது.
இங்குள்ள 288 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 20ல் ஒரே கட்டமாக நடந்த தேர்தலில், 66.05 சதவீத ஓட்டுகள் பதிவாகின. கூடவே, நான்டெட் லோக்சபா தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடந்தது.
மஹாயுதி கூட்டணியில் உள்ள பா.ஜ., 149 இடங்களிலும், சிவசேனா 81 இடங்களிலும், தேசியவாத காங்., 59 இடங்களிலும் போட்டியிட்டன. எதிர்க்கட்சி கூட்டணியான மகாவிகாஸ் அகாடி கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் 101 இடங்களிலும், சிவசேனா உத்தவ் பிரிவு 95 இடங்களிலும், தேசியவாத காங்., சரத் பவார் பிரிவு 86 இடங்களிலும் போட்டியிட்டன.
பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவை என்ற நிலையில், ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8:00 மணிக்கு துவங்குகிறது. இதற்காக, 288 ஓட்டு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஓட்டு எண்ணிக்கையை கண்காணிக்கும் பணியில், 288 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
நான்டெட் லோக்சபா இடைத்தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கையை கண்காணிக்க இரண்டு பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஓட்டு எண்ணும் மையங்களில் இருந்து 300 மீட்டர் துாரம் வரை மக்கள் கூட்டம் கூட போலீசார் தடை விதித்துள்ளனர். இந்த உத்தரவு நேற்று நள்ளிரவு முதல் நாளை வரை அமலில் இருக்கும்.
இன்று ஓட்டு எண்ணிக்கை நடக்கும் நிலையில், ‘அடுத்த முதல்வர் அஜித் பவார்’ என்ற வாசகத்துடனான சுவரொட்டிகள் மஹாராஷ்டிராவின் புனேவில் நேற்று ஒட்டப்பட்டன; பின் அவை அகற்றப்பட்டன.
ஜார்க்கண்டில், முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் ‘இண்டி’ கூட்டணி ஆட்சியில் உள்ளது. இங்குள்ள 81 சட்டசபை தொகுதிகளில், 43 தொகுதிகளுக்கு கடந்த 13ம் தேதியும், 38 தொகுதிகளுக்கு 20ம் தேதியும் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்தன.
ஹேமந்த் சோரன் ஆட்சி
தே.ஜ., கூட்டணியினர் 68 இடங்களில் போட்டியிட்டனர். மீதியுள்ள இடங்கள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டன. இண்டி கூட்டணியில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 43 இடங்களிலும், காங்., 30 இடங்களிலும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆறு இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தின.
கடந்த 2019 தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 30 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், பா.ஜ., 25 இடங்களை கைப்பற்றியது. இறுதியில் கூட்டணி பலத்துடன் ஹேமந்த் சோரன் ஆட்சி அமைத்தார்.
இந்த முறை, ஆட்சியை கைப்பற்ற பா.ஜ., தீவிர முயற்சியில் உள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில், மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் தே.ஜ., கூட்டணி ஆட்சி அமைக்கும் என, முடிவுகள் தெரிவித்தன.
தொங்கு சட்டசபை
சில முடிவுகள் மட்டும், ஜார்க்கண்டில் இரு கூட்டணிக்கும் பெரும்பான்மை இல்லாத தொங்கு சட்டசபை உருவாகும் என கூறப்பட்டுள்ளது.எப்படி இருந்தாலும், இன்று காலை 10:00 மணி அளவில் வெற்றி பெறப்போவது யார் என்பது தெரிந்துவிடும்
.இது தவிர, உத்தர பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 46 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலிலும் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்படுகின்றன.
காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா போட்டியிட்ட கேரள மாநிலம் வயநாடு லோக்சபா தொகுதிக்கான இடைத்தேர்தலிலும் பதிவான ஓட்டுகளும் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாக உள்ளன.