
பதிவு: சனிக்கிழமை, அக்டோபர் 19, 2024, 06:45 AM
புதுடில்லி,
பி.எப்.ஐ., எனப்படும் பாபுலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பு பயங்கரவாத்துக்கு நிதி திரட்டியதாகவும், அந்த அமைப்புக்கு சொந்தமான, 56 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பி.எப்.ஐ., அமைப்பு பயங்கரவாதத்துக்கு ஆதரவான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக பல்வேறு மாநிலங்களிலும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
இதையடுத்து, இந்த அமைப்பினருக்கு சொந்தமான இடங்களில் பல்வேறு மாநிலங்களின் போலீசார் மற்றும் என்.ஐ.ஏ., அமைப்பினர் சோதனைகள் நடத்தினர். இதையடுத்து, 2022ல் அந்த அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது.
அந்த அமைப்பிற்கு சொந்தமான 35 அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு, 56 கோடி ரூபாய். அறக்கட்டளை, தனியார் நிறுவனங்களின் பெயர்களில் இந்த சொத்துக்கள் இருந்தன.
வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக இந்த அமைப்பினர் நிதி திரட்டினர். இதற்காக, கேரளா, கர்நாடகா, தமிழகம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த அமைப்பினருக்கு, 29 வங்கி கணக்குகள் துவங்கப்பட்டன. இந்த அமைப்பினருக்கு, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில், 1,300க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் செயல்பட்டு வந்துள்ளனர்.
சமூக பணிக்காக துவங்கப்பட்டதாக கூறப்பட்ட இந்த அமைப்பு, சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டது. ‘ஜிகாத்’ வாயிலாக இந்தியாவில் இஸ்லாமிய நடவடிக்கைளை பரப்பும் செயல்களில் இந்த அமைப்பு ஈடுபட்டது.
அமைதியான முறையில் போராட்டங்களை நடத்துவதாக கூறிய இந்த அமைப்பினர், போராட்டங்களை வன்முறைக்களமாக்கினர். உள்நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தி, கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.