இலங்கையில் இன்று 9-வது அதிபர் தேர்தல்

Spread the love

கொழும்பு,

பதிவு: சனிக்கிழமை, செப்டம்பர் 21, 2024, 3.50 AM

இலங்கையின் புதிய அதிபரை தேர்வு செய்ய செப்டம்பர் 21-ந்தேதி தேர்தல் நடைபெறும் என அந்த நாட்டின் தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதன்படி இலங்கையில் 9-வது அதிபர் தேர்தல் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மெல்ல மெல்ல மீண்டு வரும் சூழலில் இந்த அதிபர் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த கோத்தபய ராஜபக்சேவின் அரசு 3 ஆண்டுகளில் ஆட்சியை பறிகொடுத்தது. வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் வெகுண்டெழுந்த இலங்கை மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர்.

இலங்கையில், பொருளாதார நெருக்கடிக்கு பின் முதன்முறையாக அதிபர் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று நடைபெற உள்ளது. இதையொட்டி, ஓட்டுச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

நம் அண்டை நாடான இலங்கையில், கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வீதியில் இறங்கி போராடினர்.

இதையடுத்து, அப்போது அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்சே, தங்கள் பதவியை ராஜினாமா செய்ததுடன், வெளிநாடுகளுக்கு தப்பி ஓடினர்.

புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றார். அதன்பின், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் உதவியுடன் பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டது.

இதையடுத்து, அங்கு மீண்டும் இயல்பு நிலை திரும்பியதால், வெளிநாட்டில் இருந்து அவர்கள் நாடு திரும்பினர்.

இதற்கிடையே, அதிபர் ரணில் விக்ரமசிங்கேவின் பதவி காலம் வரும் நவம்பர் 17ம்ந்தேதி முடிவடைகிறது. இதையடுத்து, புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடக்கிறது.

இன்று காலை 7:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது.

மொத்தம் 1.70 கோடி பேர் ஓட்டளிக்க தகுதி பெற்றுள்ள நிலையில், அவர்களுக்காக நாடு முழுதும் 13,400 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா, தமிழர் கூட்டணி கட்சியின் பொது வேட்பாளராக முன்னாள் எம்.பி., அரியநேத்திரன், தேசிய மக்கள் சக்தி கூட்டணி சார்பில் ஜே.வி.எம்., தலைவர் அனுரா குமாரா திசநாயகே, முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே உட்பட 38 பேர் களத்தில் உள்ளனர்.

வாக்குப்பதிவு முடிவடைந்ததும் உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கி விடும் என்றும், நாளை மதியத்துக்குள் இலங்கையின் புதிய அதிபர் யார் என்று தெரிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *