இங்கிலாந்து சென்றாலும், எனது இதயம் தமிழகத்தில்தான் இருக்கும் – அண்ணாமலை பேட்டி

Spread the love

பதிவு: புதன்கிழமை, ஆகஸ்ட் 28, 2024, 08.20 AM

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய், ஸ்பெயினுக்கு சென்றபோது ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை தேவை என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னையில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 3 மாத உயர் படிப்புக்காக இன்றிரவு இங்கிலாந்து செல்கிறேன். அரசியல் படிப்புக்காக வெளிநாடு சென்றாலும் தமிழக அரசின் நடவடிக்கைகளை உற்று கவனிப்பேன். ஆளுக்கட்சிக்கு எதிரான சண்டை தொடரும். வெளிநாடு சென்றாலும், எனது இதயம் தமிழகத்தில்தான் இருக்கும்.

ஆளுங்கட்சி செய்யும் தவறுகளை தொடர்ந்து கேள்வி கேட்பேன். எங்களது கருத்துக்கள் தொடர்ந்து அறிக்கை வாயிலாக வந்து கொண்டே இருக்கும். முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் துபாய், ஸ்பெயினுக்கு சென்றபோது ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை தேவை. எடப்பாடி பழனிசாமி மீதான எனது கருத்தை மாற்றிக்கொள்ள மாட்டேன். அது 100% சரியானது. 39 வயது அண்ணாமலை பேசியது தவறு என்றால் 70 வயது பழனிசாமி பேசியது சரியா?

செப்டம்பர் 1 முதல் உறுப்பினர் சேர்க்கையை பா.ஜனதா தீவிரப்படுத்த உள்ளது. உறுப்பினர் சேர்க்கைக்காக இம்முறை கிராமத்தை நோக்கி பா.ஜனதா பயணம் மேற்கொள்கிறது. பா.ஜனதா தரும் அலைபேசி எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்து உறுப்பினராக இணையலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *