தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை உறுதிமொழி ஏற்று கொடியை அறிமுகம் செய்தார் விஜய்

Spread the love

பதிவு: வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 23, 2024, 06.10 AM

சென்னை,

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை, அதன் தலைவரும், நடிகருமான விஜய் நேற்று அறிமுகம் செய்தார். கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை இந்தாண்டு பிப்ரவரியில் துவக்கினார். கட்சியின் கொடி, கொள்கை விளக்க பாடல் வெளியிடும் நிகழ்ச்சி, சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கொடியை அறிமுகம் செய்த விஜய், 45 அடி உயர கம்பத்தில் கொடியை ஏற்றி வைத்தார்.

பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது. அவரது இல்லத்துக்கு செல்லும் வழியெங்கும் வரவேற்பு பதாகைகள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 9.15 மணிக்கு விழா அரங்குக்கு வந்தவிஜய், 9.30 மணி அளவில் கொடியை அறிமுகம் செய்து, கல்வெட்டை திறந்து வைத்தார். தொடர்ந்து 45அடி உயர கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றினார். கொடியில் மொத்தமுள்ள 28 நட்சத்திரங்களில் 23 நட்சத்திரங்கள் பச்சை நிறத்திலும், 5 நட்சத்திரங்கள் நீல நிறத்திலும் உள்ளன.

இதைத் தொடர்ந்து, ‘தமிழன் கொடி பறக்குது; தலைவன் யுகம் பிறக்குது’ என்ற கொள்கை விளக்க பாடலையும் வெளியிட்டார்.

கட்சி நிர்வாகிகளின் வேண்டுகோளுக்கு இணங்க கொடி பாடல் இருமுறை ஒளிபரப்பப்பட்டது. எக்ஸ்வலைதளத்தில் தமிழக வெற்றிக்கழகம் என்பது நேற்று டிரெண்டிங்கில் இருந்தது. 1 லட்சத்து 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிவுகள் இடம்பெற்றன. பச்சை-வெள்ளை நிற பூக்களை கொண்டதே சங்க இலக்கியத்தில் கூறப்பட்ட வெற்றி வாகைஎன்றும் தவெக கொடியில் இடம்பெற்றிருப்பது தூங்கு மூஞ்சி வாகைஎன்றும் கூறப்படுகிறது. கொடியில் இடம் பெற்றிருப்பது ஆப்பிரிக்கயானை. இந்திய யானை இல்லை.

கொடியின் மேலேயும், கீழேயும் சிவப்பு, நடுவில் மஞ்சள் நிறம் இடம் பெற்றுள்ளன. மஞ்சளின் நடுவே வாகை பூவும், அதை சுற்றி 23 சிறிய நட்சத்திரங்களும் இடம் பெற்றுள்ளன. வாகை பூவின் வலது மற்றும் இடது பக்கத்தில், பிளிரும் போர் யானைகள் உள்ளன.

கொடியை அறிமுகம் செய்த விஜய், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் முன்னிலையில், ‘என்றும் மக்கள் சேவகனாக இருப்பேன்’ என, உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

தொண்டர்களுடன் விஜய் எடுத்துக்கொண்ட உறுதிமொழி

நாட்டின் விடுதலை, மக்கள் உரிமைகளுக்காக, தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன். நம் அன்னை தமிழ் மொழியை காக்க, உயிர் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்ற தொடர்ந்து பாடுபடுவேன்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மத நல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றை பேணிக் காக்கும் பொறுப்புள்ள தனி மனிதராக செயல்படுவேன். மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதி பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகனாக கடமை ஆற்றுவேன்.

ஜாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளை களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்க பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவ கொள்கையை கடைப்பிடிப்பேன்.

இவ்வாறு உறுதிமொழி ஏற்றார்.

தமிழக அரசியலையும், சினிமாவையும் ஒன்றை ஒன்று பிரித்துப் பார்க்க இயலாது. அண்ணா, கருணாநிதி, சிவாஜி கணேசன், எம்ஆர்.ராதா, எஸ்.எஸ்.ராஜேந்திரன், எம்ஜிஆர், பாக்யராஜ், டி.ராஜேந்தர், விஜயகாந்த், கார்த்திக், சரத்குமார், சீமான், கருணாஸ், கமல்ஹாசன், மன்சூர் அலி கான் என நடிகர்கள் பலர் அரசியல் கட்சிகளைத் தொடங்கினர். இந்த வரிசையில் சமீபத்தில் இணைந்த நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியை அறிமுகம் செய்துள்ளார்.

குறிப்பாக இவர்களில் தென்மாவட்ட நடிகர்கள் என எடுத்துக் கொண்டால் விஜய்காந்த் (விருநகர்), கார்த்திக் (நெல்லை), சீமான் (ராமநாதபுரம் – அரனையூர்) சரத்குமார் (சிவகங்கை – பள்ளத்தூர்) கமல்ஹாசன் (ராமநாதபுரம் – பரமக்குடி), விஜய் (ராமநாதபும் ) மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். சீமான், கமல், விஜய் ஆகியோர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில், தமிழகத்தில் நடிகர்கள் தொடங்கிய கட்சிகளில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் இன்றைக்கும் தவிர்க்க முடியாத அமைப்பாக கட்டமைக்கப்பட்டுள்ளன. பிற நடிகர்களின் கட்சிகள் வளர முடியவில்லை.

விஜயகாந்த், கமல்ஹாசன், கருணாஸ் போன்றவர்களின் கட்சிகள் தொடர்ந்து தனி கட்சியாக செயல்படுகின்றன. தேர்தல்களிலும் தொடர்ந்து போட்டியிடுகின்றன. ஆனாலும், ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு வளர அக்கட்சிகள் போராடுகின்றன. நடிகர்களின் ஓரிரு கட்சிகளும் தேர்தல் களத்தில் நீடிக்க முடியாமல் காலத்தால் கலைந்து பிற கட்சியுடன் ஐக்கியமாகிய சூலும் உள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலின்போது, நடிகர் சரத்குமார் தனது சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்துக் கொண்டார்.

ராமநாதபுரம் மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவித்திருந்தாலும், கட்சிக்கான அதிகாரபூர்வ கொடியை வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளார். சிவப்பு, மஞ்சள் நிறங்களை உள்ளடக்கிய கொடியின் நடுவில் தும்பிக்கயை தூக்கிய நிலையில் இரு யானைகளின் நடுவில் வாகைப்பூ இடம் பெற்றுள்ளன. இக்கொடிக்கு பின்னால் பெரிய வரலாறு, கொள்கை உள்ளது என விஜய் தெரிவித்துள்ளார்.

கட்சிக் கொடி, பாடல் அறிமுகத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அவரது கட்சியினர் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். தமிழக அரசியல் களத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் விஜய்யின் வருகை பிற கட்சிகளுக்கு எவ்வளவு தூரம் சவாலாக இருக்கப் போகிறது என்பது தேர்தல் நேரத்தில் தெரியும்.

தென்மாவட்டங்களில் இருந்து தனிக்கட்சி தலைவர்களாக உருவெடுத்த பிரபல நடிகர்களில் சீமான், கமல்ஹாசன், விஜய் ஆகியோர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது என்றாலும், செல்வாக்கு யாருக்கு என்பதற்கு தேர்தல் களமே விடையளிக்கும். விஜய் தனித்து நின்று வெற்றி வாகைப்பூ சூடப் போகிறாரா அல்லது பிற கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து தேர்தல் களம் கண்டு ஜொலிப்பாரா என்பதற்கு தேர்தல் களமே பதிலளிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *