எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி உருக்கமான வேண்டுகோள் ‘கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த ஒத்துழையுங்கள்’

Spread the love

பதிவு: திங்கட்கிழமை, ஜூலை 22, 2024, 06.00 PM

புதுடெல்லி,

$ எதிர்ப்பு அரசியலில் இருந்து வெளியே வாருங்கள்

$ அனைவரும் ஒன்றிணைந்து நாட்டுக்காக உழைப்போம்

‘எதிர்ப்பு அரசியலில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளியே வர வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளுக்கு நாம் அனைவரும் கட்சி வித்தியாசங்களை கடந்து நாட்டுக்காக உழைக்க வேண்டும்’ என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

நாடாளுமன்ற கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த அனைவரின் ஒத்துழைப்பும் தேவை. ஆக்கப்பூர்வமான கூட்டத் தொடர் நடைபெற வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர் என்றும் அவர் கூறினார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை (23 ந் தேதி) தாக்கல் செய்கிறார்.

கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் மோடி, “இது ஒரு நேர்மறையான அமர்வாக இருக்க வேண்டும். இது முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தொடர் என்பதால், இது இந்திய ஜனநாயகத்தின் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல். அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நாட்டுக்காக உழைக்க வேண்டியது ஒவ்வொரு எம்.பி. மற்றும் ஒவ்வொரு அரசியல் கட்சியினரின் கடமை. நாளை தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட் அடுத்த ஐந்தாண்டுகளுக்கான நாம் செய்யப்போகும் பணிக்கான திசையை வழங்கும்.

மேலும் இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் 2047-ம் ஆண்டுக்குள் “விக்சித் பாரத்” என்ற வளர்ந்த இந்தியா என்கிற நமது கனவுக்கு அடித்தளம் அமைக்கும்.

நாடாளுமன்றத்தில் தொடர்ச்சியான இடையூறுகள் செய்யப்படுவதால் காரணமாக ஒரு சில உறுப்பினர்களால் தங்களது கருத்துக்களை தெரிவிக்க முடியவில்லை என்பதை நினைத்து நான் வருத்தப்படுகிறேன்.

தேர்தலின் போது நடந்த அனைத்து அரசியல் சண்டைகளும் இப்போது கடந்த காலம். தேர்தலில் மக்கள் தீர்ப்பு வழங்கிவிட்டனர். தற்போது மக்களே நலனே முக்கியம். மக்களின் நலன் கருதி அவர்களின் எதிர்பார்ப்பபை நிறைவேற்றும் வகையில் செயல்பட வேண்டும்.

2029ல் மீண்டும் களத்தில் சந்திப்போம்

2029ல் தேர்தல் வரும்போது நாம் மீண்டும் களத்தில் சந்திக்கலாம். எதிர்ப்பு அரசியலில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளியே வர வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளுக்கு கட்சி வித்தியாசங்களை கடந்து அனைவரும் நாட்டுக்காக உழைக்க வேண்டும். தற்போது மக்கள் நலனே முக்கியம். அதுவரை நமது நாட்டின் பெண்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களின் வாழ்க்கையை மேம்படுத்த இந்த நாடாளுமன்றத்தை பயன்படுத்துவோம்.

தங்களது ஏமாற்றதால் சிலர் நாடாளுமன்ற நேரத்தை வீணடிக்கின்றனர். அரசின் குரலை நசுக்குவது ஜனநாயகத்திற்கு எதிரான செயல். ஏமாற்றம் காரணமாக எல்லா விவகாரங்களிலும் எதிர்மறையான கருத்துகளை தெரிவிப்பது சரியல்ல. தோல்வியால் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக நாடாளுமன்ற நேரத்தை எதிர்க்கட்சிகள் வீணடிக்கின்றன.

நாடாளுமன்ற கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த அனைவரின் ஒத்துழைப்பு தேவை. ஆக்கப்பூர்வமான கூட்டத் தொடர் நடைபெற வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *