சுதந்திரத்திற்கு பிறகு முதல்முறையாக, சபாநாயகர் பதவிக்கு நாளை தேர்தல்: பா.ஜ.க. சார்பில் ஓம் பிர்லா – இந்தியா கூட்டணியில் சுரேஷ் போட்டி

Spread the love

பதிவு: செவ்வாய்க்கிழமை, ஜூன் 25, 2024, 05.20 PM

புதுடெல்லி,

18வது நாடாளுமன்றத்தின் மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பா.ஜ.க.வின் ஓம் பிர்லாவும், இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரசின் கொடிக்குன்னில் சுரேஷும் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். இதன்மூலம், இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கு பிறகு வரலாற்றில் முதல்முறையாக சபாநாயகர் பதவிக்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிப்பெற்றது. இதில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மோடி, 3வது முறையாக பிரதமரானார். அவரது அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கும் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன.

கடந்த முறை தனிப்பெரும்பான்மையுடன் பா.ஜ.க. ஆட்சியமைத்தால் தனிப்பட்ட முறையில் பா.ஜ.க. சபாநாயகரை தேர்வு செய்தது. ஆனால் இம்முறை பெரும்பான்மை இல்லாத பட்சத்தில் கூட்டணி ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளதால் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகரை தேர்ந்தெடுக்க கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு பா.ஜ.க.வுக்கு கட்டாயமாகியுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு சபாநாயகர் பதவி கொடுக்கப்படலாம் என்ற பேச்சுகளும் எழுந்தன. அந்த வகையில் சபாநாயகர் பதவியை சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும், நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் கேட்டு வந்தன.

இதனிடையே நாட்டில் இதுவரை சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடந்ததில்லை என்ற வரலாறு இருக்கும் நிலையில், இந்தியா கூட்டணித் தரப்பில் இம்முறை வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. ராஜ்நாத் சி்ங் ஆதரவு கோரினார்

இந்த நிலையில், வரலாற்றை தொடரவும், சபாநாயகரை ஒருமனதாக தேர்ந்தெடுக்கவும் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை தொடர்பு கொண்டு ராஜ்நாத் சிங் ஆதரவு கோரினார்.

அவரிடம், பா.ஜ.க.வின் சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாகவும், ஆனால் மரபுப்படி துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு அளிக்க கோரி கார்கே வலியுறுத்தி இருந்தார்.

இதேபோல் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஆகியோரிடம் மத்திய அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியானது.

துணை சபாநாயகர் பதவி

இந்த நிலையில் நாடாளுமன்றத்துக்கு இன்று வருகைதந்த ராகுல் காந்தி சபாநாயகர் தேர்வு குறித்து பேசியதாவது:

“எதிர்க்கட்சிகளுக்கு துணை சபாநாயகர் பதவியை வழங்கினால், நாடாளுமன்ற சபாநாயகர் தேர்வில் அரசுக்கு ஆதரவளிப்போம். துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதே நாடாளுமன்றத்தின் மரபு. எதிர்க்கட்சிகள் ஆக்கபூர்வமாக அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ஓம் பிர்லா சுரேஷ் போட்டி

துணை சபாநாயகர் பதவி கொடுத்தால் மட்டுமே அரசுக்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவு என்பதை ராஜ்நாத் சிங்கிடம் தெளிவாக கூறிவிட்டோம். மீண்டும் அழைப்பதாக ராஜ்நாத் சிங் கூறினார். ஆனால் அவர் இன்னும் அதை செய்யவில்லை. எங்கள் தலைவர் அவமதிக்கப்படுகிறார்.” என்று தெரிவித்துள்ளார்.இதனிடையே, எதிர்க்கட்சிகளின் கோரிக்கை ஏற்காத தேசிய ஜனநாயகக் கூட்டணி சபாநாயகர் வேட்பாளராக கடந்தமுறை சபாநாயகராக இருந்த ஓம் பிர்லாவை அறிவித்தது. இதனையடுத்து பிரதமர் மோடியை சந்தித்த ஓம் பிர்லா சிறிது நேரம் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் தரப்பில் 8-வது முறையாக எம்.பி.யாக பதவியேற்றுள்ள கேரளாவை சேர்ந்த கொடிக்குன்னில் சுரேஷை அப்பதவிக்கு அறிவித்துள்ளனர்.

ஏற்கெனவே, நாடாளுமன்ற இடைக்காலத் தலைவர் நியமன விவகாரத்தில் அதிக முறை எம்.பி.யான சுரேஷை நியமிக்காமல், பாஜக எம்.பி. பர்த்ருஹரி மஹதாப் நியமித்தது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

நாளை சபாநாயகர் தேர்தல்

சபாநாயகர் பதவிக்கு பா.ஜ.க. சார்பில் ஓம்பிர்லாவும், எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷ்-ம் இன்று தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர். 12 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் 11.50 மணியளவில் சுரேஷ் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதனையடுத்து புதிய சபாநாயகரை தேர்ந்தெடுக்க நாளை காலை 11.00 மணிக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

இதுவரை அனைத்து சபாநாயகர்களும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கு பிறகு வரலாற்றில் முதல்முறையாக சபாநாயகர் பதவிக்கு நாளை தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

பெரும்பான்மை உறுப்பினர்கள் இருப்பதால் ஓம் பிர்லா மீண்டும் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படலாம் என தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *