குடிக்காதே என்று சொல்ல முடியாது; அளவோடு குடி என்று சொல்லலாம் – கமல்ஹாசன் கருத்து

Spread the love

பதிவு: ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 23, 2024, 04.10 PM

கள்ளக்குறிச்சி,

விஷ சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை, கமல்ஹாசன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் கிராமத்தில் விஷ சாராயம் குடித்த 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில், விஷ சாராயம் குடித்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கமல்ஹாசன் கேட்டறிந்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் கமல்ஹாசன் கூறியதாவது:-

டாஸ்மாக் அருகிலேயே விழிப்புணர்வு பதாகைகளை வைக்க வேண்டும். குடிக்காதே என்று சொல்ல முடியாது, அளவோடு குடி என்று வேண்டுமானால் சொல்லலாம். மதுக்கடைகளை இழுத்து மூட வேண்டும் என்பது தவறான கருத்து. இதற்கு உலகத்தில் பல முன்னுதாரணங்கள் உள்ளது. வருமானம் ஈட்டும் எந்த அரசும் அதை திரும்பவும் மக்களுக்கு போய்சேரும் ஒரு நற்பயனை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். விஷ சாராயம், கள்ளச்சாரயம், மது உள்ளிட்டவை ஆபத்து என்பதை மக்களின் மனதில்படும்படி எடுத்துச்சொல்லும் அறிவுரைகள் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *