நாடாளுமன்ற தேர்தல்: சினிமா தியேட்டர்களில் நாளை காட்சிகள் ரத்து

Spread the love

சென்னை,

பதிவு: வியாழக்கிழமை, ஏப்ரல் 18, 2024 10.00 AM

வாக்காளர்கள் வாக்களிப்பதை தவற விடக்கூடாது என்பதற்காக தியேட்டர்களில் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் முதல் கட்டமாக நாளை முதல் கட்ட தேர்தல் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் உள்ளிட்ட 21 மாநிலங்களுக்கு உள்பட்ட 102 தொகுதிகளில் நடைபெறுகிறது.

இதன்படி தமிழகம் முழுவதும் நாளை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி, பொதுமக்கள் ஓட்டுப்போட வசதியாக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தேர்தலையொட்டி, வாக்காளர்கள் வாக்களிப்பதை தவற விடக்கூடாது என்பதற்காக தியேட்டர்களிலும் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் கூறும்போது, “நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாளை (19-ந் தேதி) தியேட்டர்களில் 4 சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படுகிறது. காலை, மதியம், மாலை மற்றும் இரவு காட்சிகள் நடைபெறாது” என்றார்.

சில தியேட்டர்களில் 2 காட்சிகளை மட்டுமே ரத்து செய்ய முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளதே என்று கேட்டபோது, “அரசு தேர்தலுக்காக ஒரு நாள் விடுமுறை அறிவித்துள்ளது. எனவே திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ஒரு நாள் முழுவதும் 4 காட்சிகளை ரத்து செய்ய அதிகாரப்பூர்வமாக முடிவு எடுத்து அறிவித்துள்ளது. 2 காட்சிகள் மட்டுமே ரத்து செய்வதின் மூலமாக ஏதேனும் பிரச்சினைகள் எழுந்தால் அவர்கள் தான் எதிர்கொள்ள வேண்டும்” என்றார்.

தமிழகம் முழுவதும் 1,126 திரையரங்குகள் உள்ளன என்றும், அனைத்து திரையரங்குகளிலும் காட்சிகள் ரத்து செய்யப்படும் என்றும் சங்கத்தின் இணை செயலாளர் ஸ்ரீதர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *