2026ம் ஆண்டு அண்ணா தி.மு.க. ஆட்சி அமைவதை யாராலும் தடுக்க முடியாது – தேனி பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பேச்சு

Spread the love

பதிவு: செவ்வாய்க்கிழமை, மார்ச் 04, 2025, 01:`55 AM

தேனி,

2026-ம் ஆண்டு அண்ணா தி.மு.க. ஆட்சி அமைவதை யாராலும் தடுக்க முடியாது என்று தேனி பொதுக்கூட்டத்தில் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

பதவி இல்லை என்றதும் கட்சிக்கே துரோகம் செய்தவர் தான் ஓ.பன்னீர்செல்வம் என்றும் அவர் கூறினார்.

அண்ணா தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளையொட்டி, தேனி அருகே மதுராபுரியில் பொதுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது. கூட்டத்தில் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

தேனி மண் தெய்வீக மண். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என இரு பெரும் தலைவர்கள் இந்த மாவட்டத்தில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டு முதலமைச்சர் ஆனார்கள். அவர்கள் பல்வேறு திட்டங்களை நாட்டு மக்களுக்கு வழங்கினார்கள். இரு பெரும் தலைவர்களை முதலமைச்சராக்கி இந்த நாடே செழிப்பாக இருப்பதற்கு அடித்தளமிட்டது.

மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவடைய போகிறது. ஒரு துரும்பைக் கூட இந்த மாவட்டத்துக்கு கிள்ளிப் போடவில்லை. பல்வேறு திட்டங்களை கொண்டு வந்ததால் தான் இன்றைக்கு நாங்கள் நெஞ்சை நிமிர்த்தி உங்கள் முன் நிற்கிறோம். ஆனால், மு.க.ஸ்டாலின் எப்போது பார்த்தாலும் ‘போட்டோசூட்’ நடத்துகிறார்.

அண்ணா தி.மு.க. அரசு இருந்திருந்தால் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியில் இருந்து 152 அடியாக நீர்மட்டம் உயர்த்தப்பட்டிருக்கும்.

போதைப் பொருட்கள் விற்பனை அதிகம்

இன்றைக்கு திராவிட மாடல் அரசு என்று மு.க.ஸ்டாலின் அடிக்கடி சொல்லிக் கொண்டு இருக்கிறார். இது திராவிட மாடல் அரசு இல்லை. ஸ்டாலின் மாடல் அரசு. இந்த ஆட்சி வந்த ஒரே ஆண்டில், தமிழகம் முழுவதும் போதைப்பொருட்கள் விற்பனை அதிகம் நடப்பதால் அதை தடுத்து நிறுத்துங்கள் என்று நான் எச்சரிக்கை விடுத்தேன். அதைப் பொருட்படுத்தவில்லை.

எங்கே பார்த்தாலும், போதைக்கு அடிமையாகி பல்வேறு குற்றங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. கொலை நடக்காத நாளே இல்லை. பாலியல் வன்கொடுமை தொடர்கதையாக இருக்கிறது. சிறுமிகள் முதல் மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமை. பள்ளியில் படிக்கும் சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லை.

அதை எல்லாம் ஸ்டாலின் பொருட்படுத்தவில்லை. இப்போது ‘அப்பா, அப்பா’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, ‘அப்பா, அப்பா’ என்று கதறும் போது, இந்த ‘அப்பா’ ஸ்டாலின் எங்கே போனார்.

2025-ம் ஆண்டு ஜனவரி 1 முதல் பிப்ரவரி 28-ந்தேதி வரை தமிழகத்தில் 185 கொலைகள் நடந்துள்ளன. இதேபோல் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் குறித்து 273 புகார்கள் பதிவாகி உள்ளன. இந்த ஆட்சியில் சட்டம், ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது.

73 ஆண்டுகளில் பல்வேறு கட்சிகள் தமிழகத்தை ஆட்சி செய்த போதும், தமிழகத்தின் கடன் கிட்டத்தட்ட ரூ.5 லட்சத்து 18 ஆயிரம் கோடி. இப்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் முடிகிறது. இதுவரை ரூ.3 லட்சத்து 54 ஆயிரம் கோடி கடன் இருப்பதாக தகவல். இந்த ஆட்சி 5 ஆண்டுகள் முடிவதற்குள் ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்கி விடுவார்கள். இவ்வளவு கடன் வாங்கி ஏதாவது புதிய திட்டங்கள் கொண்டு வந்தார்களா?

தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றுவதாக கூறி 525 அறிவிப்புகளை வெளியிட்டார். மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தபிறகு ஒரு சில திட்டங்களை தான் நிறைவேற்றினார். எஞ்சிய அறிவிப்புகளை நிறைவேற்றவில்லை. மக்களை ஏமாற்றும் மிகப்பெரிய நாடகத்தை தி.மு.க. அரசு அரங்கேற்றி வருகிறது.

மதுரை மாநகராட்சியில் ஒரு தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். மக்களுக்கு தான் வரி போடுகிறார்கள் என்றால், மாடு, குதிரை, பன்றி, நாய், பூனைக்கு எல்லாம் வரி போட்ட பெருமை ஸ்டாலிக்கு தான் சேரும்.

இன்றைக்கு மொழி கொள்கை பற்றி பேசிக் கொண்டு இருக்கிறார்கள். அ.தி.மு.க. நிலைப்பாட்டை நாங்கள் தெளிவாக சொல்லி விட்டோம். இருமொழிக் கொள்கையை தான் கடைபிடிப்போம். அதில் எந்த மாற்றமும் கிடையாது.

தி.மு.க. அரசு அகற்றப்பட வேண்டும் என்பது தான் எங்களின் நிலைப்பாடு. வேறு எந்தக் கட்சியும் எங்களுக்கு எதிரி அல்ல.

மத்திய அரசு எதுவும் செய்யவில்லை என்று ஸ்டாலின் பேசுகிறார். இங்கே பேசி என்ன பயன்? 39 எம்.பி.க்கள் மூலம் நாடாளுமன்றத்தில் அழுத்தம் கொடுத்து தேவையானதை பெறுவதற்கு ஸ்டாலினுக்கு திறமை இல்லை.

கட்சிக்கு துரோகம் செய்தவர் ஓ.பி.எஸ்.

இங்கே ஒருத்தர் இருக்கிறார். யார் என்று உங்களுக்கு தெரியும். அவர் (ஓ.பன்னீர்செல்வம்) எடப்பாடி ஒரு மூழ்கும் கப்பல் என்று சொல்லி இருக்கிறார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அவருக்கு முதலமைச்சர் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று தர்மயுத்தம் செய்தார். அவருக்கு பதவி கிடைக்கவில்லை என்றால் எந்த எல்லைக்கும் செல்வார்.

சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற போது, அண்ணா தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும் என்று என்னை எதிர்த்து ஓட்டுப் போட்டார். அண்ணா தி.மு.க. ஆட்சியை வீழ்த்துவதற்கு தி.மு.க.வுக்கு துணை நின்றார். அத்துடன் இரட்டை இலையை முடக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் கொடுத்தார். சென்னை தலைமைக் கழகத்தை ரவுடிகளுடன் சென்று அடித்து நொறுக்கியது துரோகம் இல்லையா?.

எங்களை விட்டு போகாதீர்கள் என்று எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தோம். அவராக சென்றார். அதற்கு நாங்களா காரணம்? எப்போது பார்த்தாலும் ஜெயலலிதாவுக்கு விசுவாசம், விசுவாசம் என்கிறார். 1989-ம் ஆண்டு போடியில் ஜெயலலிதா போட்டியிட்டபோது, அவர் (ஓ.பன்னீர்செல்வம்) யாருக்கு வேலை செய்தார்? வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கு வேலை செய்தார். அதே நேரத்தில் ஜெயலலிதா தலைமையில் சேவல் சின்னத்தில் எடப்பாடியில் போட்டியிட்டு மக்களால் தேர்வு செய்யப்பட்டவன் நான்.

அவரை விட 13 ஆண்டுகளுக்கு முன்பே கட்சிக்கு வந்தேன். அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. நாங்கள் ஏற்றுக் கொண்டோம். அவர் பின் நின்றோம். அவரோடு தோளோடு, தோளாக நின்றோம். துரோகம் செய்தவர் எங்கே இருக்கிறார் என்று பாருங்கள்.

இது மூழ்குகிற கப்பல் இல்லை. இது கரை சேருகிற கப்பல். இந்த கப்பலில் ஏறியவர்கள் பிழைத்துக் கொள்ளலாம். கப்பலில் ஏறாதவர்கள் நடுக்கடலில் போகலாம். யார் நடுக்கடலில் போகிறார்கள் என்று உங்களுக்கே தெரியும்.

2026ல் அண்ணா தி.மு.க. ஆட்சி

நான் எந்த மேடையிலும் யாரையும் தவறாக பேசியது இல்லை. ஆனால், அவர் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பதை விட்டு, விட்டு பதவி கிடைக்கவில்லை என்ற காரணத்தால் ஏதேதோ பேசுகிறார். கடவுள் இருக்கின்ற காரணத்தால் யார் நல்லவர், யார் கெட்டவர் என்று முடிவு செய்ய வேண்டிய காலம் வந்து விட்டது.

2026ல் அண்ணா தி.மு.க. இருக்காது என்றார். 2026ல் அண்ணா தி.மு.க. ஆட்சி அமையும். எந்த கொம்பனாலும் வெற்றியை தடுத்து நிறுத்த முடியாது. ஒரு பயிர் செழித்து வளரும் போது களைகள் முளைக்கும். களைகள் வளர்ந்தால் பயிர் வளராது. பயிர் வளர வேண்டும் என்றால், களைகளை எடுக்க வேண்டும். அப்படித் தான் அண்ணா தி.மு.க.வில் களைகள் எடுக்கப்பட்டுள்ளது. பயிர் செழித்து வளர்ந்து நல்ல விளைச்சலை 2026-ல் கொடுக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, விஜயபாஸ்கர மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *