
பதிவு: திங்கட்கிழமை, மார்ச் 03, 2025, 07:`30 AM
ஈரோடு,
கர்நாடகாவில் இருந்து காரில் கடத்தப்பட்ட கல்லுாரி மாணவனை, பவானிசாகர் போலீஸ் சோதனைச் சாவடியில் காவலர் ஒருவர், தனி ஒருவனாக மீட்டார்.
ஈரோடு மாவட்டம், பவானிசாகரில், மேட்டுப்பாளையம் சாலை, பெரிய கள்ளிப்பட்டியில் போலீஸ் சோதனைச்சாவடியில், போலீஸ்காரர் ஹரிஷ்குமார் நேற்று அதிகாலை 2:௦௦ மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். போலீஸ் சோதனைக்காக நிறுத்தப்பட்டிருந்த ஒரு ‘இன்னோவா’ காரில் இருந்தவர், ‘என்னை கடத்திச் செல்கின்றனர்; காப்பாற்றுங்கள்’ என, அபய குரல் எழுப்பினர்.
அரிஷ்குமார் அந்த கார் அருகே சென்றபோது, காரில் இருந்தவர்கள், ‘இவன் ஒரு பைத்தியம்’ என கூறிக்கொண்டே காரை மெதுவாக இயக்கினர். சந்தேகமடைந்தஹரிஷ்குமார், கூச்சலிட்ட வாலிபரை பிடித்து இழுக்க, கதவை திறந்து கொண்டு வெளியே விழுந்துள்ளார். அதே நேரத்தில், காரில் வந்த கும்பல் மின்னல் வேகத்தில் தப்பியது. மீட்கப்பட்ட வாலிபரை பவானிசாகர் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று, விசாரணை நடத்தப்பட்டது.
பெங்களூரில் கடத்தப்பட்ட மாணவர் பவானிசாகர் சோதனைச்சாவடியில் மீட்பு
இதில், கடத்தப்பட்ட நபர், கர்நாடக மாநிலம், பெங்களூரு, சோளநாயகனஹள்ளியைச் சேர்ந்த இஸ்ரவேல், 21, என்பதும், பெங்களூரு சட்டக்கல்லுாரி இரண்டாமாண்டு மாணவர் என்பதும் தெரிந்தது. பெங்களூரு, எலஹங்காவீரசாகர் பகுதியில் பிப்., 28 இரவில் நின்ற இஸ்ர வேலை, இன்னோவா காரில் வந்த நான்கு பேர், ‘உங்கள் வீட்டை வாடகைக்கு பார்க்க வந்துள்ளோம். அதற்கு முன்பணம் கொடுக்க அருகிலுள்ள ஏ.டி.எம்., சென்று பணம் எடுத்து தருகிறோம்’ எனக்கூறி, காரில் ஏற்றியுள்ளனர்.
ஏ.டி.எம்., செல்லாமல் அதிவேகமாக செல்லவே, இஸ்ரவேல் சத்தமிட்டுள்ளார். அப்போது அவரிடம், ‘உன்னை கடத்திச் செல்கிறோம்; உன்னை வைத்து தான் உன் தந்தையிடம், 2 கோடி ரூபாய் கேட்க வேண்டும்’ என, கூறியுள்ளனர்.
அங்கிருந்து கடத்திவந்தபோது தான், ஹரிஷ்குமாரால், காரில் இருந்து இஸ்ரவேல் சமயோசிதமாக மீட்கப்பட்டுள்ளார். கடத்தல் கும்பலிடம் இருந்து மாணவரை தனி ஒருவனாக செயல்பட்டு மீட்ட ஹரிஷ்குமாரை பாராட்டி, ஈரோடு எஸ்.பி., ஜவகர் சான்றிதழ் வழங்கினார்.
காரிலிருந்த நான்கு ஆசாமிகளும் மலையாளத்தில் பேசியுள்ளனர். இதனால் மாணவனை, கேரளா கடத்திச் செல்ல முயற்சி செய்திருக்கலாம் என்றும், மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து, கர்நாடக போலீசார் முன்னிலையில், இஸ்ரவேல் ஒப்படைக்கப்படுவார் என்றும் போலீசார் கூறினர்.