
பதிவு: திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025, 01:`25 AM
சென்னை,
விமான நிலையத்துக்கு எதிராக போராடும் மக்களை இன்று பரந்தூர் திருமண மண்டபத்தில் விஜய் சந்திக்க இருக்கிறார்.
காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் ஏகனாபுரம் பகுதியில் 2வது பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் முடிவு செய்த நிலையில் அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 908 நாட்களாக ஏகானாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தனது கட்சியின் முதல் மாநாட்டில் பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, விவசாய நிலங்களை கையகப்படுத்த கூடாது என தீர்மானமும் நிறைவேற்றி இருந்தார்.
இந்த தீர்மானத்திற்கு பரந்தூர் போராட்ட குழுவினர் நன்றி தெரிவித்தனர். தீர்மானத்துடன் நின்று விடாமல் பரந்தூர் மக்களை சந்திக்கவும் விஜய் திட்டமிட்டார். இதற்காக காஞ்சீபுரம் மாவட்ட போலீசாரிடம் அனுமதி கோரப்பட்டது. இதற்கு அனுமதி அளித்த போலீசார் சில நிபந்தனைகளையும் விதித்தனர். அதிக கூட்டத்தை கூட்டாமல், அனுமதிக்கப்பட்ட நபர்கள் மட்டும்தான் வர வேண்டும் என்றும் கூட்டத்தை குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
கட்சி தொடங்கிய பிறகு முதல் முறையாக விஜய் மக்களை சந்திக்கும் நிகழ்வு என்பதால் ஏற்பாடுகளை தமிழக வெற்றிக்கழகத்தினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் பரந்தூர் தனியார் திருமண மண்டபத்தில் போராட்டக் குழுவினரையும், ஏகனாபுரம் கிராம மக்களையும் இன்று விஜய் நேரில் சந்திக்க உள்ளார். மதியம் 1 மணியளவில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சந்திப்பின் போது காஞ்சிபுரம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் மட்டுமே உடனிருக்க வேண்டும் என போலீசார் தெரிவித்தனர்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழக தொண்டர்களுக்கு விஜய் வாய்மொழி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
பரந்தூருக்கு நாளை தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் யாரும் வரவேண்டாம் என தெரிவித்துள்ளார்.