
பதிவு: திங்கள்கிழமை, செப்டம்பர் 23 2024, 02.20 AM
கொழும்பு,
இலங்கையில் நடைபெற்ற ஒன்பதாவது அதிபர் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க 57,40,179 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து, இலங்கையின் முதல் இடதுசாரி அதிபர் என்ற சிறப்புடன் அவர் பதவியேற்கவுள்ளார்.
‘நிறைவேறியது நுாற்றாண்டுக்கனவு: புதிய மறுமலர்ச்சியை தொடங்குவோம்’ என்று அவர் நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பொருளாதார வீழ்ச்சியை சந்தித்த பிறகு, இலங்கை மெல்ல மெல்ல தலைதூக்கி வரும் நிலையில், அந்நாட்டு அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலை நடத்தி முடித்துள்ளது இலங்கை. தற்போதைய அதிபர் ரணில், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா, மார்க்சிஸ்ட் பின்புலம் கொண்ட தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரா குமார திசநாயகே ஆகியோர் இடையே முக்கிய போட்டி நிலவியது.
முதல் விருப்ப ஓட்டு எணணிக்கை முடிவில், அனுரா 39 சதவீதம் ஓட்டுகளும், சஜித் 34 சதவீதம் ஓட்டுகளும் பெற்றிருந்தனர். இரண்டாம் விருப்ப ஓட்டு எண்ணிக்கை முடிவில், அனுராவுக்கு 42.31 சதவீதம் ஓட்டுகளும், சஜித்துக்கு 32.76 சதவீதம் ஓட்டுகளும் கிடைத்திருந்தன. இருவரிடையே கடும் இழுபறி நிலவி வந்த நிலையில், அனுரா குமாராவை வெற்றியாளராக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன் மூலம் இலங்கை வரலாற்றில் அதிபர் பதவியை கைப்பற்றிய முதல் இடதுசாரி என்ற சிறப்பை அனுரா திசநாயகே பெற்றார்.
புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்ட அனுரா குமாரா திசநாயகே வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பல நூற்றாண்டுகளாக உருவான கனவு இறுதியாக வெற்றியடைந்துள்ளது. இது ஒரு எந்தவொரு தனிமனிதனின் பணியால் ஏற்பட்ட சாதனையல்ல. உங்களைப் போன்ற பல்லாயிரக்கணக்கான தொண்டர்களின் ஒட்டுமொத்த முயற்சியால் ஏற்பட்ட சாதனை. உங்கள் அர்ப்பணிப்பால், இந்த நிலையை அடைந்துள்ளோம். அதற்காக நான் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இந்த வெற்றியானது, நம் அனைவரையும் சேரும். தங்கள் வியர்வையையும், கண்ணீரையையும், உயிரையும் பொருட்படுத்தாமல் உழைத்த பல ஆயிரக்கணக்கானோரின் தியாகத்தால் இந்த நிலையை அடைந்தோம். அவர்களின் தியாகம் ஒருபோதும் மறக்கப்படாது. நமது பொறுப்பை உணர்ந்து அவர்களது நம்பிக்கையையும், போராட்டத்தையும் உயர்த்திப் பிடிப்போம்.

நம்பிக்கையுடன் வாக்களித்த லட்சக்கணக்கான மக்களை நம்முடன் சேர்த்து முன் அழைத்துச் செல்வோம், இலங்கையின் புதிய சரித்திரத்தை படைக்கத் தயாராவோம். சிங்கள, தமிழ், இஸ்லாமியர்கள் என அனைத்து தரப்பு மக்களின் ஒற்றுமையே, இந்த புதிய சாதனையை படைப்பதற்கு காரணமாகியுள்ளது. இந்த பலத்துடன் ஒருங்கிணைந்து எதிர்காலத்தை உருவாக்கவும், புதிய மறுமலர்ச்சியையும் ஏற்படுத்தவும் பாடுபடுவோம், எனக் குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், அந்நாட்டின் ஒன்பதாவது அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சனிக்கிழமை நடைபெற்றது. இந்த அதிபர் தேர்தலுக்காக 40 பேர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், 39 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டது. அதில் சுயேச்சை வேட்பாளர் ஏ. முகமது இலியாஸ் என்பவர் கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி மரணமடைந்தார். அதிபர் ரணில் விக்ரமசிங்க சுயேட்சையாகவும், எதிர் கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச ஐக்கிய மக்கள் சக்தி முன்னணி சார்பாகவும், மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி)யின் தலைவர் அநுர குமார திசாநாயக்க, மகிந்த ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்ச ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளராகவும், தமிழ் பொது கூட்டமைப்பு சார்பாக அரியநேந்திரன் உள்ளிட்ட 38 பேர் போட்டியிட்டனர்.
இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அமைந்துள்ள அநுராதபுரம் மாவட்டம் தம்புத்தேகம எனும் பகுதியில் 24.11.1968ல் கூலி தொழிலாளியின் மகனாய் அநுர குமார திசாநாயக்க பிறந்தார். தனது பள்ளி படிப்பினை தம்புத்தேகவில் உள்ள கமினி மகா வித்யாலயா பள்ளியிலும், தம்புத்தேகம மத்திய கல்லூரி மற்றும் பேராதனை பல்கலைக்கழகத்தில் பயின்றார்.

1988ம் வருடம் இடதுசாரிக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி)யில் இணைந்தார். 1995ம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியின் மாணவர் அமைப்பின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். 2000ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் மூலம் முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக ஆனார். 2004ம் ஆண்டு அப்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்சவின் கூட்டணி ஆட்சியில் விவசாய அமைச்சராக அநுர குமார திசாநாயக்க பதவி வகித்தார்.
2014ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி)யின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். 2019ம் ஆண்டு நடைபெற்ற எட்டாவது அதிபர் தேர்தலில் போட்டியிட்ட அநுர குமார திசாநாயக்க 418,553 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தார். தொடர்ந்து இலங்கையில் ஊழலுக்கு எதிராக அநுர குமார திசாநாயக்க குரல் கொடுத்து வந்தார். மேலும் இலங்கையில் 2022ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது நடைபெற்ற போராட்டங்களில் முன்நின்று நடத்தியதில் அநுர குமார திசாநாயக்க முன்னணி வகித்ததும் குறிப்பிடத்தக்கது.