பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை: நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி சிவராமன் கைது

Spread the love

பதிவு: செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 20, 2024, 04.00 AM

போச்சம்பள்ளி,

பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி சிவராமனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் சார்பில் கடந்த 5-ந் தேதி முதல் 9-ந் தேதி வரையில் தேசிய மாணவர் படை முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் பள்ளியை சேர்ந்த 17 மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்கள் பள்ளி வளாகத்திலேயே தினமும் தங்கி முகாமில் பங்கேற்றனர்.

இந்த நிலையில் முகாமிற்கு சென்ற 12 வயதுடைய 8-ம் வகுப்பு மாணவி கடந்த 8-ந் தேதி அதிகாலை பள்ளி கலையரங்கத்தில் சக மாணவிகளுடன் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அதிகாலை 3 மணி அளவில், முகாம் பயிற்சியாளரான காவேரிப்பட்டணத்தை சேர்ந்த சிவராமன் (வயது 32) என்பவர் மாணவியை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இவர் நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராக இருந்தார். இவர் கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சில தனியார் பள்ளிகளில் தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு பயிற்றுனராகவும் பணியாற்றியுள்ளார்.

மாணவி புகார்

இதுகுறித்து மாணவி, பள்ளியின் முதல்வர் சதீஷ்குமாரிடம் தெரிவித்தார். அவர் இந்த விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்று கூறினார். கடந்த 16-ந் தேதி இரவு மாணவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் தனது தாயாரிடம் நடந்த சம்பவங்கள் குறித்து கூறினார். அவர் மாணவியை கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார்.

பின்னர் சம்பவம் தொடர்பாக மாணவி அளித்த புகாரின் பேரில் பர்கூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சூர்யகலா விசாரணை நடத்தினார்.மேலும் போக்சோ பிரிவின் கீழ் பயிற்சியாளர் சிவராமன் மற்றும் பள்ளியின் முதல்வர் சதீஷ்குமார் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்தார். இந்த சம்பவம் தொடர்பாக சேலம் சரக டி.ஐ.ஜி. உமா, கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை ஆகியோர் நேற்று நேரில் பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து பாலியல் பலாத்கார சம்பவத்தை மறைத்த குற்றத்திற்காக, திருப்பத்தூர் பூங்காவனத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்த பள்ளி முதல்வர் சதீஷ்குமார் (35), கந்திகுப்பம் இந்திரா நகரை சேர்ந்த பள்ளியின் சமூக அறிவியல் ஆசிரியை ஜெனிபர் (35), கந்திகுப்பத்தை சேர்ந்த பள்ளி தாளாளர் சாம்சன் வெஸ்லி (52), பயிற்சியாளர்களான தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் தாலுகா கொள்ளுப்பட்டியை சேர்ந்த சக்திவேல் (39), சூளகிரி தாலுகா அமுத கொண்டப்பள்ளியை சேர்ந்த சிந்து (21), கிருஷ்ணகிரி கிட்டம்பட்டியை சேர்ந்த சத்யா (21), பர்கூர் சின்ன ஒரப்பத்தை சேர்ந்த சுப்பிரமணி (54) ஆகிய 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *