18வது மக்களவை தொடங்கியது: எம்.பி.யாக மோடி பதவியேற்றார்

Spread the love

பதிவு: திங்கட்கிழமை, ஜூன் 24, 2024, 05.20 PM

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடிக்கு நாடாளுமன்ற இடைக்கால சபாநாயகர் பர்த்ருஹரி மஹதாப் எம்.பி.யாக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்கவும், சபாநாயகர், துணை சபாநாயகரை தேர்வு செய்யவும் நாடாளுமன்றத்தின் 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் காலை 11 மணிக்கு தொடங்கியது. இன்றும், நாளையும் முதல் 2 நாட்கள் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்க உள்ளனர்.

எம்.பி.க்கள் பதவி ஏற்பு விழா

முன்னதாக ஜனாதிபதி மாளிகையில் இடைக்கால சபாநாயகராக பா.ஜ.க. எம்.பி. பர்த்ருஹரி மஹதாப் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார்.

பர்த்ருஹரி மஹதாப் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து இன்றைய கூட்டத்தை தொடங்கினார். முதலில் மறைந்த எம்.பி.க்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனையடுத்து ஆளும் கட்சி தலைவர் என்ற முறையில் எம்.பி.யாக பதவி ஏற்க பிரதமர் மோடிக்கு தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மஹதாப் அழைப்பு விடுத்தார். அதை ஏற்று முதல் நபராக பிரதமர் மோடி எம்.பி.யாக பதவி ஏற்றார்.

இதைத் தொடர்ந்து இடைக்கால சபாநாயகருக்கு உதவுவதற்கு 5 எம்.பி.க்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவில் கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் மூத்த எம்.பி. கொடிகுன்னில் சுரேஷ், தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சுதீப் பந்தோ பாத்யாய, பா.ஜ.க.வை சேர்ந்த ராதாமோகன் சிங், பகன்சிங் குலஸ்தே ஆகிய 5 பேர் நியமிக்கப்பட்டு இருந்தனர்.

நாடாளுமன்றத்தில் உள்ள 543 எம்.பி.க்களுக்கும் இடைக்கால சபாநாயகரால் மட்டுமே பதவி பிரமாணம் செய்து வைக்க இயலாது என்பதால் அவருக்கு உதவ இந்த 5 எம்.பி.க்கள் குழு அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த 3 எம்.பி.க்கள் அந்த குழுவில் இடம் பெற மறுத்துவிட்டனர். இதையடுத்து இடைக்கால சபாநாயகர் பர்த்ருஹரி மஹதாப்பும், பா.ஜ.க. எம்.பி.க்கள் இருவரும் புதிய எம்.பி.க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும் நிகழ்ச்சியை மேற்கொண்டுள்ளனர்.

இதனைதொடர்ந்து அமித்ஷா, நிதின்கட்காரி உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பதவியேற்றனர். அதன்பிறகு மாநிலங்களின் ஆங்கில எழுத்து வரிசை அடிப்படையில் அனைத்து மாநிலங்களைச் சோ்ந்த புதிய எம்.பி.க்களும் வரிசையாக பதவியேற்கின்றனர். அந்தவகையில் ஆந்திரா, அசாம், அருணாசலபிரதேசம் என இன்று மொத்தம் 280 உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொள்கின்றனர்.

நீட் எதிர்ப்பு கோஷம்

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியேற்க மேடை ஏறிய போது, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சிலர் நீட் தேர்வு முறைகேடுக்கு எதிராக குரல் எழுப்பியதால் சலசலப்பு ஏற்பட்டது. எதிர்க்கட்சிகளின் கோஷங்களுக்கு மத்தியில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டார்.

நாளை தமிழகத்தை சேர்ந்த எம்.பி.க்கள் உட்பட 263 உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொள்கின்றனர். இதைத் தொடர்ந்து 26ம் தேதி சபாநாயகர் தேர்தல் நடைபெறும். 27ம் தேதி மாநிலங்களவை கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், அன்றைய தினம் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்ற உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *