
பதிவு: திங்கட்கிழமை, ஜூன் 24, 2024, 05.10 PM
கள்ளக்குறிச்சி,
கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும், உயிரிழந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று ஸ்டாலின் பதவி விலக கோரியும் தமிழகம் முழுவதும் இன்று அண்ணா தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விஷச் சாராய சாவு ஏற்பட்ட கள்ளக்குறிச்சியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.
கள்ளச்சாராய சாவு 59 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு தி.மு.க. அரசே பொறுப்பு. ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கறுப்பு சட்டையுடன் எடப்பாடி கலந்து கொண்டார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அண்ணா தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர்.
இந்தஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்தவர்களை மாவட்ட செயலாளர் இரா.குமரகுரு வரவேற்று பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்று கண்டன உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
உயர் அதிகாரிகளுடன் பலமுறை கூட்டம் நடத்திய முதல்வர் ஸ்டாலின் கள்ளச்சாராயத்தை தடுக்க தவறிவிட்டார். ஏழைகளை பற்றி அரசுக்கு கவலையில்லை. நகரின் மையப்பகுதியில் அரசின் ஆதரவு இல்லாமல் கள்ளச்சாராயம் விற்பனை செய்ய முடியாது.
தி.மு.க. அரசே பொறுப்பு
கள்ளச்சாராயம் குடித்து 58 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும். 58 மரணங்களுக்கும் பொறுப்பு தமிழக அரசு தான். காற்றை எப்படி தடை செய்ய முடியாதோ, அதுபோல மக்களின் உணர்வுகளை தடை செய்ய முடியாது. மக்களுக்கு நீதி கேட்பதில் என்ன தவறு? போராட்டத்தை முடக்க முயன்றாலும், அஞ்ச மாட்டோம். மக்கள் கொந்தளித்து போய் இருக்கிறார்கள். இதற்கு பதில் சொல்லி ஆக வேண்டும். திமுக ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது.
அதிகாரத்தை வைத்துக்கொண்டு தி.மு.க.,வினர் அதிகாரிகளை ஆட்டிப்படைக்கிறார்கள். அ.தி.மு.க.,வின் ஆர்ப்பாட்டத்திற்கு மேடை அமைக்கக்கூடாது என இடையூறு செய்தார்கள். தற்காலிக மேடையில் இப்போது நிற்கிறேன். மாவட்ட கலெக்டர் பொய் கூறியதால், கள்ளச்சாராயம் குடித்தவர் பலர் சிகிச்சைக்கு வராமல் உயிரிழந்தனர். தமிழகத்தில் கள்ளச்சாராயம் ஆறாய் ஓடுகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், நீதிமன்ற வளாகம் என நகரின் மையப் பகுதியில் கள்ள சாராய விற்பனை தங்கு தடையின்றி நடந்துள்ளது. இந்த ஆட்சி எப்படிப்பட்ட ஆட்சி என்று பாருங்கள். ஆளும் கட்சி ஆதரவு இல்லாமல் இது நடக்காது. நிர்வாக திறமையற்ற முதலமைச்சர் நாட்டை ஆளுகிறார். அப்படித்தான் இருக்கும்.
இந்த அரசு அடக்கு முறையை கையாள்கிறது. மக்களுக்கு நீதி கிடைக்காது. அப்பாவி மக்களின் உயிர் பறிபோய் இருக்கிறது. அரசு அமைத்துள்ள சிபிசிஐடி விசாரணை, ஆணையம் அமைப்பால் நீதி கிடைக்காது. எனவே தான் சிபிஐ விசாரணை கேட்கிறோம். அப்போது தான் நீதி கிடைக்கும்.
மக்களுக்கு குரல் கொடுக்கும் இயக்கம் அண்ணா தி.மு.க. எந்த தியாகத்துக்கும் அண்ணா தி.மு.க. தயார். கள்ளச்சாராயம் குடித்து 58 பேர் பலியாகி இருக்கிறார்கள். இதற்கு போராட்டம் நடத்தினால் எங்களை ஒடுக்குவார்களா? இதற்கெல்லாம் அஞ்சமாட்டோம்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அவர் பேசும்போது கள்ளச்சாராயம் ஒழிப்பு பற்றி முதலமைச்சர் ஸ்டாலின் பேசியது, கள்ளச்சாராய மரணத்திற்கு அரசே பொறுப்பு என பெண்கள் குற்றஞ்சாட்டியது போன்ற வீடியோ காட்சிகள் திரையிடப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் மோகன், முன்னாள் எம்.பி. காமராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அழகுவேல்பாபு, பிரபு, கள்ளக்குறிச்சி ஒன்றிய செயலாளர்கள் ராஜசேகர், தேவேந்திரன், சின்னசேலம் ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், அய்யம்பெருமாள், தியாகதுருகம் ஒன்றிய செயலாளர்கள் அய்யப்பா, கிருஷ்ணமூர்த்தி, மற்றும் நகர செயலாளர் பாபு, ஜெயலலிதா பேரவை செயலாளர் ஞானவேல் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர கிளை கழக நிர்வாகிகள், மகளிரணியினர் கலந்து கொண்டனர்.