
பதிவு: திங்கட்கிழமை, ஜூன் 24, 2024, 05.00 PM
புதுடெல்லி,
3வது முறை ஆட்சிக் காலத்தில் மும்மடங்கு வேகத்தில் பணியாற்றுவோம் என பிரதமர் மோடி உறுதியளித்தார்.
சாமானிய மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவோம் என்றும் அவர் கூறினார்.
18வது நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடர் இன்று துவங்கியது.
முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் கூறியதாவது: “நாடாளுமன்ற ஜனநாயகத்தில், இது ஒரு புகழ்மிக்க நாள். ஆம், சுதந்திரத்துக்குப் பிறகு முதல் முறையாக, நமது சொந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில், பதவியேற்பு விழா நடக்கிறது. முன்னதாக, பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் பதவியேற்பு விழாக்கள் நடந்தன. இந்த குறிப்பிடத்தக்க நாளில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்.பி.க்களையும் நான் மனதார வரவேற்கிறேன். அவர்களுக்கு எனது நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டுக்கு சேவை செய்யவும், 140 கோடி மக்களின் நம்பிக்கையை காப்பாற்றவும் எம்.பி.க்கள் பாடுபட வேண்டும்.
18வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. நாடாளுமன்றம் கூட்டம் சாமானிய மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும். புதிய உத்வேகம், புதிய உற்சாகத்துடன் பணிகளை துவங்க வேண்டிய பணி நம் முன் இருக்கிறது. 2047ல் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற கனவை நிறைவேற்றும் வகையில் செயல்படுவோம்.
3 மடங்கு கடினமாக உழைப்போம்
உலகின் மிகப்பெரிய தேர்தல் மிகவும் பிரம்மாண்டமாகவும், கோலாகலமாகவும் நடத்தப்பட்டது. சுதந்திரத்துக்குப் பிறகு 2வது முறையாக, ஒரு கட்சிக்கு 3 வது முறையாக சேவை செய்யும் வாய்ப்பை நாட்டு மக்கள் வழங்கியிருப்பதால் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 60 ஆண்டுகளுக்கு பிறகு எங்களின் நோக்கம், செயல்பாட்டுக்காக மக்கள் 3வது முறையாக எங்களுக்கு வாய்ப்பளித்துள்ளனர். இதன்மூலம் எங்களின் பொறுப்பு மும்மடங்கு அதிகரித்துள்ளது. எனவே, 3வது பதவிக்காலத்தில், நாங்கள் 3 மடங்கு கடினமாக உழைப்போம் என்று நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.கடந்த 10 ஆண்டுகளில், நாங்கள் வழக்கமான பாரம்பரியத்தை கடைபிடிக்க முயற்சித்தோம். ஏனென்றால், நாட்டின் வளர்ச்சிக்கு நிலையான ஆட்சி முக்கியம். ஆட்சியை வழிநடத்த பெரும்பான்மை அவசியம். நாட்டை வழிநடத்த ஒருமித்த கருத்து மிக முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். எனவே, 140 கோடி மக்களின் ஆசைகளையும் லட்சியங்களையும் நிறைவேற்றுவதற்கு அனைவரையும் அரவணைத்து செல்ல முயற்சிப்போம். கடமை, செயல்பாடு மற்றும் கருணையுடன் எமது ஆட்சி நடைபெறும். 2 முறை அரசை வழிநடத்திய அனுபவம் எங்களுக்கு உள்ளது.
நாளை ஜூன் 25. இந்த நாள் இந்திய ஜனநாயகத்தின் விழுந்த கறையின் 50 ஆண்டுகளைக் குறிக்கிறது. இந்தியாவில் எமெர்ஜென்சி அறிவிக்கப்பட்ட 50வது வருடம். இந்த நாளில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை முற்றிலுமாக நிராகரித்தது, அரசியலமைப்பின் ஒவ்வொரு பகுதியும் துண்டு துண்டாக கிழிக்கப்பட்டது, நாடு சிறைச்சாலையாக மாற்றப்பட்டது. ஜனநாயகம் முற்றிலும் நசுக்கப்பட்டது. அரசியலமைப்பை பாதுகாக்க நினைக்கும் இந்தியாவின் புதிய தலைமுறை இந்த நாளை ஒருபோதும் மறக்காது. 50 ஆண்டுகளுக்கு முன்பு செய்த இதுபோன்ற செயலை மீண்டும் இந்தியாவில் யாரும் செய்யத் துணிய மாட்டார்கள்.
பொறுப்பான எதிர்க்கட்சி தேவை
நாட்டு மக்கள் எதிர்க்கட்சிகளிடம் இருந்து நல்ல நடவடிக்கைகளை எதிர்பார்க்கின்றனர். ஜனநாயகத்தின் மாண்பையும், நாட்டின் சாமானிய குடிமக்களின் எதிர்பார்ப்புகளையும் எதிர்க்கட்சிகள் நிறைவேற்றும் என நம்புகிறேன். நாடகங்களையோ, இடையூர்களையோ விரும்பவில்லை. மக்களுக்கு கோஷங்கள் தேவையில்லை, வாழ்வாதாரம் தேவை. நாட்டுக்கு ஒரு நல்ல எதிர்க்கட்சி, பொறுப்புள்ள எதிர்க்கட்சி தேவை. சாமானியர்களின் இந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற எம்.பி.க்கள் முயற்சிப்பார்கள் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. 18வது நாடாளுமன்றம் இந்திய ஜனநாயகத்திற்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வரும். நாட்டில் இருந்து வறுமையை முற்றிலும் ஒழிக்க உறுதி ஏற்போம்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.