திருமாவளவன் கட்டுப்பாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இல்லை – விஜய்க்கு அரசியல் அறிவு தேவை – அண்ணாமலை

Spread the love

பதிவு: திங்கட்கிழமை, டிசம்பர் 9, 2024 02:10 AM

கோவை,

திருமாவளவன் கட்டுப்பாட்டில் விசிக இல்லை என்று அண்ணாமலை கூறினார்.

கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

புத்தக வெளியீட்டு விழாவின் மூலம், நக்சல்வாதத்தை ஊக்கப்படுத்த புத்தக பதிப்பகத்தார் முயற்சிக்கிறார்களா?. தமிழகத்தில் அம்பேத்கரை வைத்து அரசியல் வியாபாரம் நடத்துகிறார்கள். அம்பேத்கர் புத்தகத்தை வெளியிட வேறு ஆட்களே இல்லையா?. லாட்டரி மார்டினின் மருமகன் ஆதவ் அர்ஜூனா, ஆனந்த் டெல்டும்டேவை புத்தக வெளியிட்டு விழாவுக்கு அழைத்தது ஏன்?.

ஆன்ந்த் டெல்டும்டே நகர்புற நக்சலைச் சேர்ந்த ஒரு முக்கிய குற்றவாளி. தமிழகத்திற்கு நக்சல்களைக் கொண்டு வந்துவிடலாம் என திட்டமிடுகிறார்களா என தெரியவில்லை. தமிழகத்தில் நக்சல் விதமான அரசியலைக் கொண்டு வர வேண்டாம்.

திருமாவளவன் கட்டுப்பாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இல்லை. விசிக யார் கையில் உள்ளது?; திருமா கையில் உள்ளதா? அல்லது துணைப்பொதுச்செயலாளர் கையில் உள்ளதா?. திருமாவளவன் செல்லாத நிகழ்ச்சிக்கு அவரது கட்சியைச் சேர்ந்த ஆதவ் அர்ஜூனா எப்படி சென்றார்?. விசிகவிற்கு ஒரு தலைமையா? அல்லது இரண்டு தலைமைகளா?.

ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை எடுக்க திருமாவளவன் தயங்குவது ஏன்?. விசிக கட்சிக்கு நிதி கொடுப்பவர் மீது திருமாவளவன் கை வைக்க விரும்பவில்லை என்பதையே இது காட்டுகிறது. மன்னராட்சி என்று சொல்கிறீர்களே அதற்கு உறுதுணையாக இருந்தது யார்?. தமிழக மக்களை எத்தனை காலத்திற்கு ஏமாற்றிக் கொண்டு இருப்பீர்கள்.

நடிகராக இருந்து இப்போதுதான் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார், அவருக்கு அரசியலின் அடிப்படை புரிதல் தேவை. அரசியலில் அடிப்படை பொது அறிவை தவெக தலைவர் விஜய் வளர்த்து கொள்ள வேண்டும். விஜய் பேசியதில் எந்த தவறும் இல்லை. விஜய் மணிப்பூர் செல்ல தயாராக இருந்தால், அவருடன் மணிப்பூர் சென்று அங்குள்ள கள நிலவரத்தை எடுத்துரைக்க தயார்.

மணிப்பூர் பற்றி விமர்சிப்பவர்களை அங்கு அழைத்துச் செல்ல தயார். மணிப்பூரில் யாருக்கும் பிரச்சினை ஏற்படாத வகையில் மத்திய அரசு தீர்வு கண்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *